சசிகலா மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் - ஆதரவாளர்கள் போராட்டம்
பெங்களூருவில் இருந்து சிறை தண்டனை முடித்துவிட்டு தமிழகம் திருப்பிய சசிகலா நிச்சயம் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என அதிரடியாக அறிவித்திருந்தார். ஆனால் அதற்குப் பிறகு சில வாரங்கள் ஓய்வில் இருந்து வந்தார். சசிகலா அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்து வந்தனர்.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா என அறிக்கை வெளியிட்டது, பொதுச் செயலாளர் உரிமை கோரும் வழக்கை விரைவுபடுத்தியது என சசிகலாவின் நகர்வுகள் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தன. ஆனால், தற்போது அரசியலுக்கு வரவில்லை என சசிகலா கூறியிருப்பது, அவரது ஆதரவாளர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு, அவரது ஆதரவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சசிகலாவின் இந்த முடிவால், தாங்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும், எனவே சசிகலா மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சற்று நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.