'கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்' - சசிகலா வேண்டுகோள்

V. K. Sasikala Kodanad Case
By Swetha Subash Apr 22, 2022 01:39 PM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் 2-வது நாளாக இன்று விசாரணை தொடங்கியது. கோடநாடு பங்களாவில் 2017-ம் ஆண்டு நிகழ்ந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக, தனிப்படை போலீசார் இதுவரை 250-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். 

குறிப்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, சசிகலாவின் உறவினரான விவேக் மற்றும் கோடநாடு பங்களா மேலாளார் நடராஜன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தியிருந்தனர்.

இந்த நிலையில், கோடநாடு பங்களாவின் உரிமையாளர் என்ற அடிப்படையில் சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐ,ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னை தியாகராய நகரில் உள்ள சசிகலாவின் வீட்டில் இன்று காலை 10 மணி முதல் விசாரணை நடத்தி வந்தனர்.

முதல் நாளான நேற்று ஐந்து மணி நேரம் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையான இன்றும் 4 மணிநேரமாக தொடர்ந்த விசாரணை நிறைவுபெற்றது.

இந்த விசாரணையில், 2017 கொலை, கொள்ளை சம்பவத்திற்குப் பிறகு பங்களாவை நேரில் சென்று பார்த்தீர்களா, கனகராஜ் கொலை, சிசிடிவி கண்காணிப்பாளர் தினேஷ், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கோடநாடு பங்களாவுடன் சம்மந்தப்பட்ட பிரமுகர்கள் குறித்து கேள்வி எழுப்பபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

மேலும், காவல்துறை கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.