மீண்டும் அதிமுகவில் சசிகலா? - ஓபிஎஸ் கூட்டத்தில் நடந்த காரசார விவாதம்
தொடர்ந்து தேர்தல்களில் அதிமுக தோல்வியை தழுவி வரும் நிலையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் என அனைத்திலும் தோல்வியை சந்தித்த அதிமுகவுக்கு இது பெரும் பின்னடைவாக அமைந்தது.
இதற்கிடையில் மீண்டும் அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற கோஷம் எழத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ,பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் தேனி மாவட்ட அதிமுக நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் அதிமுக செயலாளர் சையது கான் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும் கலந்து கொண்ட நிலையில் இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் பேசும் போது அதிமுக படுதோல்வியைச் சந்தித்தற்கு முக்கிய காரணமாக இருந்தது என்றும், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை எவ்வித நிபந்தனையும் இன்றி கட்சியில் மீண்டும் சேர்ந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக தேனி மாவட்டச் செயலாளர் சையது கான் அதிமுக எந்தக் காலத்திலும் தோற்றது இல்லை. கடந்த காலங்களிலும் நமக்குள் இருந்தே பிரச்சினைகளே தோல்விக்குக் காரணமாக அமைந்துள்ளது என கூறினார்.
மேலும் அதிமுக ஒரே கட்சியாக ஒன்றாக இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு இருக்கும்போது யாராலும் அதிமுகவைத் தோற்கடிக்க முடியாது என்ற முடிவுக்குத் தொண்டர்களும் நிர்வாகிகளும் வந்துள்ளனர். எனவே கட்சியை விட்டுப் பிரிந்து சென்ற அனைவரையும் மீண்டும் இணைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பான தீர்மானம் வரும் மார்ச் 5 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேனி அதிமுகவினர் செயல்வீரர்கள் கூட்டத்தில் நிறைவேறப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது சசிகலா மற்றும் தினகரனை குறிவைத்து பேசப்பட்டுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.