ஜெயக்குமார் மூலம் அதிமுகவில் ரீ- எண்ட்ரி கொடுக்கிறாரா சசிகலா? - தொண்டர்கள் எதிர்பார்ப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது பிரச்சனையின் மூலம் அதிமுகவில் மீண்டும் இணைந்து செயல்பட சசிகலா தரப்பினர் முயன்று வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியில் 1991 ஆம் ஆண்டு தேர்தலில் இருந்து 2021 ஆம் ஆண்டு தேர்தல் வரை அதிமுக சார்பில் தொடர்ந்து போட்டியிட்டார்.
அதில் 1996மற்றும் 2021 தேர்தலிலும் தோல்வியைத் தழுவினார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக ராயபுரம் அவரது கோட்டையாக இருந்தது. ஆனால் 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்த ஜெயக்குமார் தனது தொண்டர்களின் ஆதரவோடு 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி தனது பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடினார்.
பொதுவாக அதிமுகவில் ஜெயலலிதா இருந்தவரை அவரது பிறந்தநாளை தவிர வேறு யாருடைய பிறந்தநாளையும் பிரமாண்டமாக கொண்டாடுவது வழக்கமாக இருந்ததில்லை. ஜெயக்குமார் கொண்டாடியதன் விளைவு அவர் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். பின் 2016 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பின்னர் சசிகலா உதவியுடன் ஜெயலலிதாவை சமாதானப்படுத்தி மீன்வளத்துறை அமைச்சரானார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், 2017ஆம் ஆண்டு துவக்கத்தில் ஈபிஎஸ்- ஓபிஎஸ் பிரிந்த போது, நிதியமைச்சரானார். பின் அதிமுக ஒன்றிணைந்த போது மீண்டும் மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்தார். இதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி ஆட்சி செய்த போது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிமுகவை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டனர். அதில் இருந்து அதிமுக தரப்பில் சசிகலாவை அதிகம் விமர்சித்துப் பேசியவர்களில் முக்கியமானவர் ஜெயக்குமார்.
ஒட்டு மொத்த அதிமுக நிர்வாகிகளின் எண்ணங்களை எப்போதும் ஊடகத்தின் முன் எடுத்துச் சொல்லிக்கொண்டே இருப்பார். சசிகலா மூலம் தனக்கான ஆதாயம் பெற்றுக்கொண்டாலும், ஒருமித்த கருத்தாக சசிகலாவை எதிர்த்து பேசி வந்த நிலையில் அதிமுக ஆட்சி முடிந்து திமுக ஆட்சி தமிழகத்தில் ஆரம்பம் ஆனது. கடந்த கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது ஜெயக்குமார் திமுக நிர்வாகி கள்ள ஓட்டு தொடர்பான பிரச்சனையின் போது தாக்கியதாக கைது செய்யப்பட்ட புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கிட்டதட்ட மூன்று வழக்குகளில் கைதான ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைத்துவிட்ட நிலையில் இன்று காலை சிறையில் இருந்து வெளியே வந்தார். அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் புழல் சிறையருகே திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வெளியே வந்த ஜெயக்குமார், திமுக அரசுக்கு எதிராகவும் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்.
இந்நிலையில் அவருக்கு ஆறுதல் கூறும் விதமாக ஜெயக்குமார் மனைவியிடம் சசிகலா பேச வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் நேரிலும் செல்லலாம் என பேச்சுக்கள் எழுந்தன. ஏனெனில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் நலிவடைந்து இருந்த போது மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறிய சசிகலா, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி மறைந்த போது அவருக்கும் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
அவரது தம்பி ராஜா சமீபத்தில் சசிகலாவை சந்தித்ததும் தொடர்ந்து அதிமுக தொண்டர்களை சந்திக்க பயனம் செய்யவும் ஆரம்பித்த சசிகலா ஜெயக்குமார் மனைவியை சந்தித்தோ , போனிலோ தொடர்புகொண்டு ஆறுதல் சொல்வார் என அதிமுக தொண்டர்கள் ஆவலுடம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.