அதிமுகவை கைப்பற்றிய சசிகலா? - சபதத்தின் பின்னணி என்ன?
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சரணடைய பெங்களூரு புறப்படும் முன்னதாக ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு சமாதியில் கையால் அறைந்து சபதம் எடுத்துக் கொண்டார்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா இன்று மரியாதை செலுத்தும் நிலையில், அன்றைய நாளில் நடந்த அதே நிகழ்வுகள் இன்று நிகழ்ந்துள்ளது.
அந்த நாளில் இருந்து மீண்டும் பயணத்தை தொடங்கியது போலவே இன்றும் நிகழ்ந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி தமிழகத்தின் முதலமைச்சரும், அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதா காலமானதை அடுத்து, அன்றிரவே அவசர அவசரமாக எம்.எல்.ஏக்கள் ஒன்றுகூடி சட்டமன்ற குழு தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தை தேர்ந்தெடுத்தனர் அதன்பிறகு தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.
கட்சியின் மூத்த தலைவர்களான செங்கோட்டையன், தம்பிதுரை உள்ளிட்டோர் சசிகலாவை சந்தித்து கட்சியை வழிநடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்ததன் விளைவாக, டிசம்பர் 29-ம் தேதி அதிமுக-வின் பொதுக்குழு கூட்டப்பட்டு ஒருமனதாக கட்சியின் பொதுசெயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் அதிமுக கட்சியின் 6-வது பொதுசெயலாளராக சசிகலா பதவியேற்றார். அதன் தொடர்ச்சியாக தம்பிதுரை, சைதை துரைசாமி உள்ளிட்டோர் சசிகலாவை முதலமைச்சராக பதவியேற்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
சசிகலாவை முதலமைச்சராக முன்னிறுத்தி கோஷம் ஒலிக்கத் தொடங்கியதும் அதிமுகவில் குழப்பங்களும், சச்சரவுகளும் எழத் தொடங்கின. வர்தா புயல் பாதிப்பை திறம்பட கையாண்ட விதம் மற்றும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் விளைவாக ஜல்லிக்கட்டு சட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகி வருவதாக கருத்து எழுந்த நிலையில், 2017ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்களிடம் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக சசிகலாவை ஏக மனதாக ஏற்றுக் கொள்வதாக கையெழுத்து வாங்கப்பட்டது.
இதையடுத்து, முதலமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ததும், எந்நேரமும் சசிகலா முதலமைச்சராக பதவியேற்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போதைய தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதவி வகித்த வித்யாசாகர் ராவ் மும்பையில் முகாமிட்டிருந்ததால் சசிகலாவின் பதவியேற்பு விழா தள்ளிபோனது. பிப்ரவரி 7-ம் தேதி இரவு 9 மணியளவில் ஜெயலலிதாவின் சமாதிக்கு திடீரென வந்த ஓ.பன்னீர்செல்வம், 40 நிமிடங்கள் கண்மூடி அமர்ந்து தியானம் செய்தார். தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் பெற்றுவிட்டதாக ஓபிஎஸ் கூறியது அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஓ.பன்னீர்செல்வத்துடன் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 10 எம்.எல்.ஏக்கள் அணிவகுத்தனர்.
அதற்கு மறுநாள் அதிமுக தலைமையகத்தில் எம்.எல்.ஏக்கள் மத்தியில் உரையாற்றிய சசிகலா, துரோகங்கள் ஒருபோதும் வென்றது கிடையாது என்றும். அதுநாள்வரை ஜெயலலிதாவிற்காக வாழ்ந்ததாகவும், இனி அவரது கனவுகளுக்காக வாழ்வேன் என்றும் அறிவித்தார். அதன்பின் சசிகலா தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 130 பேரை அணி தாவாமல் இருக்க கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்தார். இந்நிலையில், பிப்ரவரி 14ம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறைத் தண்டனையை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்தது.
இதையடுத்து, அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சரணடைய பெங்களூரு புறப்படும் முன்னதாக ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். சமாதியில் கையால் அறைந்து சபதமும் எடுத்துக் கொண்டார். அதைத்தொடர்ந்து பெங்களூரு சென்ற சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்தார். இதற்கிடையே, மீண்டும் ஒன்றுபட்ட எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணி 2017ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி அதிமுக அதிமுக பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை பொதுசெயலாளர் பதவியில் இருந்து நீக்கியது.
இதனை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தி வந்த சசிகலா, தண்டனை காலம் முடிந்து சென்னை திரும்பிய பின் என்னவிதமான தாக்கம் ஏற்படப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருந்தது. சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து வெளியில் வந்த சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தார். ஆனால், அவர் ஜெயலலிதாவின் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகக் கூறி பின்வாங்கினார்.
இந்தநிலையில் அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டங்கள் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் அண்ணா சமாதிகளுக்கு சென்று சசிகலா கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து அன்றைய நாளை போலவே இன்று மீண்டும் சமாதியில் அறைந்து சபதம் எடுத்து கொண்டார். இந்த சபதம் அதிமுகவை மீட்டெடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. நாளை அதிமுக பொன் விழா ஆண்டு முடிந்த பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளிவருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.