2026 தேர்தலில் நான் யார் என்பதைக் காட்டுவேன்; அதிமுக ஒரே அணியாக போட்டி - சசிகலா!
நான் அமைதியாக இருப்பதற்கான விடை விரைவில் கிடைக்கும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
சசிகலா
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற காதணி விழா ஒன்றில் சசிகலா கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்பதை தீர்மானிப்பது, மக்கள்தான்.
இந்த தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க குறித்து எல்லோருக்கும் புரியும். அ.தி.மு.க ஒன்றாக இணைவதற்கான நேரம் வந்துவிட்டது. நான், என் அனுபவத்தில் இதைச் சொல்கிறேன். 2026 தேர்தலில் எங்களுக்கும் தி.மு.க-வும் நேரடி போட்டியாக இருக்கும்,
பங்காளி சண்டை
அந்த தேர்தலில் நான் யார் என்பதைக் காட்டுவேன். தி.மு.க என்ன ஆகும் என்பதையும் கணித்து வைத்துள்ளேன். ஓ.பி.எஸ் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர், அவர் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். அவருக்கு வாக்களித்த மக்களும் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர் என்றுதான் வாக்களித்தனர்.
அ.தி.மு.க-வில் நடப்பது பங்காளி சண்டை, இதில் நான் என்ன கருத்து சொல்ல முடியும். 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க ஒரே அணியாக போட்டியிட்டு வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடிக்கும். நான் அமைதியாக இருப்பதற்கான விடை விரைவில் கிடைக்கும்" என்றார்.