சசிகலா எங்கே? தீவிர கண்காணிப்பில் உளவுத்துறை- பரபரப்பாகும் அரசியல்களம்

politician jayalalitha karunanidhi
By Jon Feb 17, 2021 07:48 PM GMT
Report

சென்னை திரும்பிய சசிகலா தி.நகர் வீட்டில்தான் இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக உளவுத்துறை வட்டாரத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா தண்டனை காலம் முடிந்து விடுவிக்கப்பட்டு பிப்ரவரி 9ஆம் திகதி சென்னை வந்த நிலையில் தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள வீட்டில் தங்கினார். தற்போது அவர் அந்த வீட்டில் தான் இருக்கிறாரா என்ற சந்தேகம் உளவுத்துறையினர் மத்தியில் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலா சென்னை வந்து ஒரு வாரத்துக்கு மேலாகியும் வெளியில் தலைகாட்டவில்லை. உளவுத்துறையினரும் சசிகலாவின் வீட்டை நோட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சசிகலா தஞ்சை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல இருப்பதாக முன்கூட்டியே தகவல் வெளியாகியிருந்தது. தஞ்சையில் உள்ள தமது கணவர் நடராஜனின் நினைவிடத்துக்கு செல்லவும், மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்குச் சென்று வணங்கிவிட்டு மக்களைச் சந்திக்கவும் திட்டமிட்டிருந்தார்.

மேலும் ஒரு சில சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காகவே ஜெயலலிதா பயன்படுத்திய டொயோடோ பரடோ கார் கடந்த வாரம் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிப்ரவரி 15ஆம் திகதி மதுரைக்கு விமானத்தில் செல்லத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் வீட்டிலிருந்து வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் சசிகலா வீட்டுக்கு விவேக் உள்ளிட்ட உறவினர்கள் அவ்வப்போது வந்து செல்கின்றனர். இதனிடையில் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டனில் பல வருடங்களாக சமையலராக இருந்த ராஜம்மாளின் சமையல் தான் சசிகலாவுக்கும் பிடிக்கும். சசிகலா சிறைக்கு சென்ற நிலையிலும் ராஜம்மாளுக்கு மாதாமாதம் சம்பளம் கொடுக்க உத்தரவிட்டிருந்தார்.

சசிகலா விடுதலைக்கு பின்னர் வீடு திரும்பிய நிலையில் ராஜம்மாள் அங்கு வந்து அவரை சந்தித்து பேசியிருக்கிறார். வழக்கம்போல் இனி நானே உங்களுக்கு சமைத்து தர வேண்டுமென்று ராஜம்மாள் விடுத்த கோரிக்கையை சசிகலா ஏற்றுக்கொள்வதாக அவரிடம் தெரிவித்தார். இதனிடையில் ராஜம்மாளை வரவழைத்த போதிலும் பெரிய பெரிய டிபன் கேரியர்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

இதனால் வீட்டில் எத்தனை பேர் உள்ளனர், உண்மையில் அதில் உணவு தான் கொண்டு செல்லப்படுகிறதா என்றும் ஒரு தரப்பு கேள்வி எழுப்புகிறது. கவனத்தை திசை திருப்பிவிட்டு சசிகலா வெளியூர் சென்றுவிட்டாரா என்றும் உளவுத்துறை மத்தியில் ஒரு சந்தேகம் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் சசிகலாவுக்கு நெருக்கமானவர்களிடம் இது குறித்து விசாரித்தால் அவர் வீட்டில்தான் இருக்கிறார் என அடித்துக் கூறுகின்றனர். அதிமுகவில் மீண்டும் இணைய பாஜகவின் முக்கிய புள்ளிகள் மூலம் சசிகலா காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. அது பலனளிக்காவிட்டால் அமமுக மூலம் அரசியல் பயணத்தை தொடரவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.