பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு ஜீரணிக்க முடியாத வேதனை அளிக்கிறது - சசிகலா இரங்கல்

students dead sasikala
By Irumporai Dec 17, 2021 10:25 AM GMT
Report

நெல்லையில் தனியார் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவர்கள் உயிரிழந்த செய்தி ஜீரணிக்க முடியாத வேதனையளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “ திருநெல்வேலியில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் கழிவறை கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவச் செல்வங்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

இதை யாராலும் ஜீரணிக்க முடியாத ஒரு செய்தியாக, வேதனையோடு பார்க்க வேண்டியுள்ளது. மேலும் இதே விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவச் செல்வங்கள் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.

மாணவச்செல்வங்கள் நம் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள், அவர்களின் வாழ்வில் முறையான கவனமும், தகுந்த பாதுகாப்பும், மிகுந்த அக்கறையும் செலுத்தவேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்குக்கும் இருக்கிறது.

குறிப்பாக, கல்விக் கூடங்களுக்கு மிகப்பெரிய அளவில் இருக்கிறது. ஆகவே கல்விக் கூடங்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால்தான், இது போன்ற தவறுகள் ஏற்படாமல் அவர்களால் தடுக்க முடியும்.

பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு ஜீரணிக்க முடியாத வேதனை அளிக்கிறது - சசிகலா இரங்கல் | Sasikala Pays Tribute To School Students Dead

மேலும் இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து தவறு இழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இதில், உயிரிழந்த மூன்று மாணவர்களையும் இழந்து வாடும் அவர்களுடைய குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கொள்கிறேன். “ என்று குறிப்பிட்டுள்ளார்.