சசிகலா பெயர் வாக்காளர் பட்டியலில் ஏன் இடம்பெறவில்லை? இதுதான் காரணம்
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. மே 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஒரு மாதம் தீவிரமாக நடைபெற தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், முன்னாள் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு அமமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சசிகலா வாக்களிக்க முடியவில்லை என்றால் ஆயிரம் விளக்கு தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அமமுக தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது சசிகலா பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
“தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்ல முகவரியில் இதுவரை வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்த சசிகலா அந்த முகவரியில் இருந்தே தனது வாக்கை செலுத்தி வந்துள்ளார். ஆனால் தற்போது போயர்ஸ் கார்டன் இல்லம் அரசுடைமையாக்கப்பட்ட நிலையில், போயர்ஸ் கார்டன் வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலா பெயர் நீக்கப்பட்டது.
தொடர்ந்து சசிகலா தற்போது தி.நகர் இல்லத்தில் வசித்து வரும் நிலையில், தற்போதைய முகவரியில் வாக்காளர் பட்டியலில் இணைக்க சசிகலா விண்ணப்பிக்கவில்லை என்பதால் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது” என்பதே காரணமாகச் சொல்லப்படுகிறது.