சசிகலாவிற்கு செக் - சென்னையில் பல கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதல்!
உச்சநீதிமன்றத்தின் உத்தரவினை அடுத்து, செங்கல்பட்டு அருகே உள்ள சசிகலாவின் சொத்துக்களை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவிலிருந்து சசிகலா சென்னை வரும் நிலையில், அதனை நேரடி ஒளிபரப்பு செய்து வரும் ஜெயா தொலைக்காட்சியை அரசு கேபிளில் இருட்டடிப்பு செய்யப்படுவதாக புகார் கிளம்பியிருக்கிறது.
சொத்துகுவிப்பு வழக்கில் 4 வருடம் சிறை தண்டனை முடிந்து பெங்களூருவில் இருந்து சசிகலா இன்று காலை சென்னை திரும்பி வருகிறார். பெங்களுரிலிருந்து இன்று காலை 7 மணி முதல் சசிகலா தமிழகம் வந்து கொண்டிருக்கும் நிகழ்வை ஜெயா தொலைக்காட்சி காலை முதலே நேரலை செய்து வந்து கொண்டிருக்கிறது.
இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், செங்கல்பட்டு அருகே உள்ள சசிகலாவின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தமிழக அரசு பறிமுதல் செய்துள்ளதாக தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்த தகவலறிந்த சசிகலா ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். செங்கல்பட்டில் சசிகலாவுக்கு பல ஏக்கர் நிலங்களும், பிரமாண்ட அளவில் பங்களாவும் உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, இளவரசி மற்றும் சுதாகரன் சொத்துக்களை தமிழக அரசு பறிமுதல் செய்த நிலையில், தற்போது சசிகலாவின் சொத்துக்களையும் பறிமுதல் செய்துள்ள விவகாரம் அரசியலில் பெரும் பரபரப்பை தற்போது ஏற்படுத்தியிருக்கிறது.