’சசிகலா இணைப்பு, கூடுதல் தொகுதிகள்’ - அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் பாஜக

tamil political vote time
By Jon Mar 02, 2021 06:34 PM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான இறுதிகட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை, வேட்பாளர் நேர்காணலில் அதிமுக, திமுக மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாமக, திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை மட்டுமே இடங்களை உறுதி செய்துள்ளன.

காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக - பாஜக இடையே இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஏற்கனவே உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அதிமுக- பாஜக இடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் முதல்வர் ஈ.பி.எஸ், துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோர் பங்கு பெற்றனர்.

ஆனால் அதில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை விட கூடுதலான இடங்களை பாஜக கேட்பதாகவும், ஆனால் அதிமுக 22 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தரப்பையும் கூட்டணியில் சேர்த்து கொள்ள வேண்டும் என பாஜக நெருக்கடி கொடுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சசிகலா கட்சியில் சேர்த்து கொள்ள முடியாது என ஈ.பி.எஸ் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

இந்த விஷயத்தில் ஓ.பி.எஸ் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார். அமமுக இணைப்பு பற்றி அதிமுக முடிவெடுக்க தான் வேண்டும் எனவும் கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை இன்னும் இரண்டு தினங்களில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எல்.முருகன் தெரிவித்திருந்தார்.