அரசியலை விட்டு விலகி ஆன்மீக பயணத்திற்கு சென்ற சசிகலா!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சார களத்தில் தீயாய் அனல் பறந்துக் கொண்டிருக்கிறது. திடீரென அரசியலிலிருந்து சசிகலா மற்றும் ரஜினிகாந்த் விலகி ஒதுங்கினர். அதிமுகவை மீட்டெடுக்க வேண்டுமென துடித்துக் கொண்டிருக்கும் சசிகலா, சிறையில் இருந்து விடுதலையான பிறகு அதற்கான தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டார்.
இதற்காகவே, வழக்குகள் அனைத்தையும் தூசி தட்டினார். சசிகலாவை சேர்த்துக் கொள்ள சொல்லி பாஜக தலைமையே அதிமுகவுக்கு கோரிக்கை விடுத்திருந்த போதிலும், எதையும் காதில் போட்டுக் கொள்ளாத அதிமுக, சசிகலா மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார் என திட்டவட்டமாக தெரிவித்தது.
தன்னை சுற்றி நடக்கும் வேலைகளை சரியாக கணித்த சசிகலா, அரசியலில் இருந்து விலகுவதாக திடீர் அறிக்கை வெளியிட்டார். சசிகலாவை முன்வைத்து அமமுகவை தேர்தலில் தேற்றி விடலாம் என்ற டிடிவி தினகரனின் கனவு பாழாய் போனது.

இனிமேல் சசிகலா இல்லாமல் தான் அமமுக செயல்பட வேண்டும் என்பதை புரிந்து கொண்ட தினகரன், மனதை தேற்றிக் கொண்டு தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அரசியலில் இருந்து விலகிக் கொண்ட சசிகலா தற்போது ஆன்மீகத்தை நோக்கி சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் 15ம் தேதி முதல் தமிழகத்தில் இருக்கும் பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்ய சசிகலா திட்டமிட்டிருக்கிறார். தேர்தலுக்கு பின்னர் மீண்டும் அரசியலில் குதிக்கும் பொருட்டு சசிகலா இந்த ஆன்மீக பயணத்தை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.