சசிகலா விலகினால் தான் இது நடக்குமா? டிடிவி தினகரன் சொல்வது என்ன?
அரசியலை விட்டு ஒதுங்கப்போவதாக சசிகலா அறிவித்த நொடியிலிருந்து அதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லப்படுகிறது. சசிகலா மீதான வழக்குகள் எல்லாம் மத்திய அரசின் அமைப்புகளால் தொடரப்பட்டது என்பதால், சசிகலா அரசியலில் தனித்து இயங்கினால் அது அதிமுக கூட்டணிக்கு பாதகமாகிவிடுமோ என்று அஞ்சுவதாலும், மேலும் மத்திய அரசின் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டியிருக்கலாம் என்பதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
மற்றொரு தரப்பினரோ, தேர்தல் நெருங்குவதால் இந்த முடிவை சசிகலா எடுத்துள்ளார் என்றும், அவரது உடல்நலனை கருத்தில் கொண்டு இதனை எடுத்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர். ஆனால் அவரது அறிக்கையில், திமுக எனும் பொது எதிரியை ஒழிக்க உண்மைத் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டிய தருணம் என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையே டிடிவி தினகரனோ, சசிகலாவின் இந்த முடிவு தனக்கு வேதனை அளிப்பதாகவும், தான் ஒதுங்கி இருந்தால் அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள் என அவர் நம்புவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.