சசிகலா தமிழகம் திரும்புவது எப்போது?
இன்று பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலா அவர்கள் எப்போது தமிழகம் திரும்புவார் என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா நாளை விடுதலை செய்யப்படுவார் என சிறை நிர்வாகம் அறிவித்தது.
இதனையடுத்து தனக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையான ரூ.10 கோடியே 10 ஆயிரத்தை பெங்களூரு தனிக்கோர்ட்டில் செலுத்தினார். இந்நிலையில் விடுதலையாக ஒருவாரம் இருந்த நிலையில் அவருக்கு கடும் காய்ச்சலுடன் மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. இதனையடுத்து பவுரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு கொரோனா இருப்பதும் உறுதியானதுடன், நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து அவரை விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்து வந்தனர். இந்நிலையில் தற்போது வெளியான அறிக்கையின்படி, சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு மேலும் குறைந்துள்ளது. அவர் சுயநினைவுடன் நன்றாக பேசுகிறார். அவரது இதய துடிப்பு நிமிடத்திற்கு 74, ரத்த அழுத்தம் 130/80 என்ற அளவில் உள்ளது.
அதன்படி, இன்று காலை பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில், அவரை விடுதலை செய்வதற்கான சான்றிதழ்களில் சிறை அதிகாரிகள் கையொப்பம் பெற இருக்கின்றனர். காலை 9 மணி முதல் 10 மணிக்குள் அவர்கள் விக்டோரியா மருத்துவமனைக்கு வந்து கையெழுத்து பெற்று கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், 10.30 மணிக்கு அவர் விடுதலையாகி விடலாம்.
இந்த கால அவகாசம் மாலை 3 மணி வரை அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர் மருத்துவமனையில் இருந்து செல்லாவிட்டாலும், மாலை 6 மணியுடன் சிறை கைதிக்கான அனைத்து நடைமுறைகளும் திரும்ப பெறப்படும். இதையடுத்து, அவர் சாதாரண நோயாளியாகவே கருதப்படுவார். விருப்பம் இருந்தால் அவர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொள்ளலாம். இல்லையென்றால் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து கொள்ளலாம்.
இது குறித்து சசிகலா தரப்பில் கூறும்போது; மேலும் 2 நாட்கள் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டு, பின்னர் வேண்டுமென்றால் தனியார் மருத்துவமனை அல்லது ஹோம் குவாரன்டைனுக்கு சென்று விடலாம் என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் கொரோனா நோயாளி என்பதால், குவாரன்டைன் விதிமுறையை அவர் கடைபிடிக்க வேண்டியுள்ளது. இதனால் தொண்டர்களும், உறவினர்களும் அவரை நெருங்க முடியாது என்று கூறப்படுகிறது.
அதே நேரம் காலதாமதமாக தமிழகம் சென்றால், தொண்டர்களின் வரவேற்பையும் பெறலாம். சென்னையில் ஏற்பாடு செய்திருந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளனர். இவை அனைத்தும் சசிகலா மற்றும் அவர்களின் உறவினர்களில் கையில் உள்ளது. அவர்கள் எடுக்கும் முடிவை வைத்துதான் சசிகலா எப்போது தமிழகம் வருவார் என்பது தீர்மானிக்கப்பட இருக்கிறது.
மேலும் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால் அரசு விதிமுறைகளின்படி தனிப்படுத்துதலில் அவர் இருக்கவேண்டிய சூழல் இருப்பதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெட்ரா பிறகு அழைத்து வரப்படலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.