கொட்டும் மழையில் தேவர் சிலைக்கு சசிகலா மரியாதை
மதுரையில் கொட்டும் மழையிலும் கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு சசிகலா இன்று மரியாதை செய்தார்.
நாளை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று 29ம் தேதியே தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த புறப்பட்டுள்ள சசிகலா.
இதற்காக தஞ்சாவூரில் இருந்து கார் மூலம் நேற்று மாலை மதுரை வந்தவர், தனியார் விடுதியில் தங்கி ஓய்வெடுத்தார்.
தொடர்ந்து இன்று காலை ஜெயலலிதா பிரசாரத்திற்கு பயன்படுத்திய வேனில் ஏறி சசிகலா புறப்பட்டார். அந்த வேனில் அ.தி.மு.க. கொடி கட்டப்பட்டு இருந்தது.
கொட்டும் மழையிலும் சசிகலாவுக்கு ஆதரவாளர்களும், அ.ம.மு.க.வினரும் குடை பிடித்தப்படி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அ.ம.மு.க.-அ.தி.மு.க. கொடிகளை ஏந்தி தொண்டர்கள் கோஷமிட்டனர்.
மதுரை கோரிப்பாளையம் வந்த சசிகலா அங்கு உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் சிலைகளுக்கும் அவர் மாலை அணிவித்தார். அதன் பிறகு சசிகலா பசும்பொன் புறப்பட்டு சென்றார்.