தென்மாவட்டங்களில் சசிகலா சுற்றுப்பயணம் : தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
சசிகலா இன்று முதல் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது.
ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் என அனைத்திலும் தோல்வியை சந்தித்த அதிமுகவுக்கு இது பெரும் பின்னடைவாக அமைந்தது.
இதற்கிடையில் மீண்டும் அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற கோஷம் எழத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ,பன்னீர்செல்வத்தை அதிமுக செயலாளர் சையது கான் தலைமையில்
தேனி மாவட்ட அதிமுக நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் அதிமுக படுதோல்வியைச் சந்தித்தற்கு முக்கிய காரணமாக கட்சி இரட்டை தலைமையின் கீழ் இருப்பது தான் என்றும்,
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை எவ்வித நிபந்தனையும் இன்றி கட்சியில் மீண்டும் சேர்ந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சசிகலாவுக்கு அதிமுகவில் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதனால் அதிமுகவில் பெரும் குழப்பமும் சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் சசிகலா இன்று முதல் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின்போது அவர் அதிமுக நிர்வாகிகளை சந்திப்பார் என எதிர்பார்க்கபடுகிறது.
இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி சென்ற சசிகலா, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு கார் மூலம் நெல்லை கே.டி.சி. நகர் வந்த அவருக்கு ஏராளமான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர்.
அதன்பின்னர் சசிகலா அங்கிருந்து புறப்பட்டு நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம் வழியாக விஜயாபதி கிராமம் சென்று அங்குள்ள பழம் பெருமை வாய்ந்த விசுவாமித்திரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
பின்பு கார் மூலம் உவரி வழியாக சென்று இன்று மாலை திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். நாளை காலை திருச்செந்தூரில் இருந்து காரில் புறப்பட்டு நெல்லை கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர். சிலை பகுதிக்கு செல்கிறார்.
பின்னர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டு ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக இலஞ்சி குமாரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
பின்னர் பாபநாசம் மலைப்பகுதிக்கு சென்று அகத்தியர் பாதம் பதித்த இடத்தில் உள்ள அகத்தியர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்.
இதைத்தொடர்ந்து 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, கடையநல்லூர், சிவகிரி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.