விட்டால் அண்ணாவுக்கே ஆலோசனை கொடுத்திருக்கேன் என கதை விடுவார் சசிகலா: ஜெயக்குமார் கிண்டல்!
கொஞ்சம் விட்டால் அண்ணாவுக்கே ஆலோசனை நானதான்கூறினேன் என சசிகலா கூறுவார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த சில மாதமாக அதிமுக, அமமுக நிர்வாகிகளிடம் சசிகலா பேசி வரும் ஆடியோ தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்னிடம் எம்ஜிஆர் கருத்துகளை கேட்பார்:
இந்த நிலையில் நேற்று சசிகலா வெளியிட்டுள்ள ஆடியோவில் தான் பரபரப்பன அகரஹார சிறையில் இருந்த போது தமிழக மக்களுக்காக சிறையிலிருந்தபடியே பூஜை செய்ததாக கூறியுள்ளார்.
மேலும், தான் ஜெயலலிதா மட்டுமில்லை, மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கும் தான் ஆலோசனைகளை கூறி இருப்பதாகவும் கட்சி தொடர்பாக தன்னிடம் எம்ஜிஆர் கருத்துகளை கேட்பார் என்று சசிகலா அந்த ஆடியோவில் கூறுவதாக உள்ளது .
எம்ஜிஆருக்கே தான் ஆலோசனை வழங்கியுள்ளதாக சசிகலா கூறும் ஆடியோவை கேட்ட அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கோபத்தின் உச்சியில் உள்ளனர்.
அண்ணாவுக்கே ஆலோசனை கூறியிருப்பார்:
இந்த ஆடியோ குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறும் போது எம்ஜிஆருக்கே ஆலோசனை சொல்லியதாக சசிகலா கூறியது காதில் பூ சுற்றுகிற விஷயம் என கூறினார்.
அதே சமயம் ஆற்றலும் , ஆளுமைத் திறமையும் புத்திக்கூர்மையும் உள்ள எம்ஜியாருக்கு சசிகலா ஆலோசனை சொல்லியதாக கூறினால் அதுதான் உலகின் தலைசிறந்த நகைச்சுவை என்றார்
மேலும், கொஞ்சம் விட்டால் அண்ணாவுக்கே ஆலோசனை சொன்னதாக கூட சொல்வார். தமிழகத்து மக்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதிமுக இயக்கத்தை யாரும் அழிக்கவும் முடியாது, யாராலும் கைப்பற்றவும் முடியாது என ஜெயக்குமார்கூறினார்