சசிகலா வாக்களிக்க முடியாவிட்டால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் - அமமுக
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் ஏப்ரல் 4-ம் தேதி மாலை உடன் நிறைவடைந்தது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. பிப்ரவரி மாதம் விடுதலையான சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்துவிட்டார். இந்நிலையில் தற்போது வாக்காளர் பட்டியலில் சசிகலாவின் பெயர் இடம்பெறவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை மாநகராட்சி வேண்டும் என்றே சசிகலாவின் பெயரை நீக்கியுள்ளதாக அவர் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
சசிகலா பெயர் நீக்கம் தொடர்பாக புகார் அளித்தால் விசாரிக்கப்படும் எனத் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார்.
தற்போது ஆயிரம் விளக்கு தொகுதியில் சசிகலா வாக்களிக்க முடியாவிட்டால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என அமமுக தெரிவித்துள்ளது.