‘சசிகலாவை கட்சியில் இணைங்க...’ - சேலத்தில் இபிஎஸ் தீவிர ஆலோசனை - அதிமுகவில் பரபரப்பு
சசிகலா மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வலியுறுத்தி இருக்கிறார்.
கடந்த மாதம் 19ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படுதோல்வியை அடைந்தது.
நேற்று தேனியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் அம்மாவட்ட நிர்வாகிகள் மீண்டும் சசிகலா, டிடிவி.தினகரனை கட்சியில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது -
சசிகலா தலைமையேற்று, டிடிவி தினகரன் வழிகாட்டுதல்கள் படி தான் கட்சியை வழிநடத்த முடியும். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்று இரு தலைமை இருப்பதால் கோஷ்டிகள் சேர்ந்து கட்சி வளர்ச்சியை நோக்கி செல்வதில்லை.
இதற்கு எடுத்துக்காட்டு நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படு தோல்வியை சந்தித்துள்ளது. ஒபிஎஸ், ஈபிஎஸ் கட்சியை வழி நடத்தி வரும் நிலையில் தொடர்ந்து கட்சி தோல்வியை சந்தித்து வருகிறது. அதிமுகவிற்கு ஒரு தலைமை மட்டுமே தேவை.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
இந்நிலையில், சசிகலாவை இணைக்கும் குரல் எழுந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் செம்மலை உள்ளிட்ட ஆதரவாளர்களுடன் சேலத்தில் உள்ள வீட்டில் எடப்பாடி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.