சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அதிமுக நீக்கியது சரியே... - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சொத்துக்குவிப்பு முறைகேடு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ர ஹாரா சிறையில் சசிகலா உள்ளிட்ட மூவரும் சரணடைந்தனர்.
4 ஆண்டுகளில் சசிகலா இருமுறை பரோலில் வெளியே வந்தார். இதையடுத்து சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்தியதால், சிறைத்தண்டனை முடித்து விடுதலையான சசிகலா சென்னை வந்து அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அரசியலை விட்டு விலகுவதாக திடீரென அறிவித்தார்.
இதனையடுத்து, தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்தார்.
சசிகலா சிறைக்கு சென்ற பிறகு கட்சியின் முழு பலத்தையும் கையிலெடுத்த ஈபிஎஸ்- ஓபிஎஸ், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பொதுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுத்த முடிவு செல்லாது என தீர்மானம் நிறைவேற்றினர்.
இதனையடுத்து, டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து வெளியேறினார். அதிமுகவின் இந்த நகர்வு சசிகலாவின் தலையில் பேரிடியாக விழுந்தது. இதனையடுத்து, சசிகலா நீதிமன்றத்தை நாடினார்.
அதிமுக பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலாவும், டிடிவி தினகரனும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதிமுகவிலிருந்து வெளியேறிய டிடிவி தினகரன், அமமுக என்ற புதிய கட்சியை தொடங்கியதால் இந்த வழக்கிலிருந்து விலகிவிட்டார்.
சசிகலா மட்டும், தனது பொதுச் செயலாளர் பதவியை மீட்டெடுக்க சட்டப் போராட்டத்தை தொடர்ந்தார். அரசியலிலிருந்து தன்னை விலக்கிக் கொண்ட பிறகும், இந்த வழக்கில் பின்வாங்க அவர் விரும்பவில்லை.
இந்நிலையில், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கிய அதிமுகவின் பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால், அதிமுகவில் பரபரப்பு, சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.