சசிகலா இந்த தேதியில் தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட போகிறார்? அவரை வரவேற்க பணிகள் மும்முரம்
கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு இன்று மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது. இந்த முடிவுகள் பொறுத்துதான் அவர் எப்போது 'டிஸ்சார்ஜ்' செய்யப்படுவார் என தெரிய வரும். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, கடந்த 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
அதற்கு முன்பே, அவருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இப்போது, கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் கிடையாது. ஆனாலும், விதிமுறைப்படி, மூன்று நாட்கள் செயற்கை சுவாச கருவி உதவியின்றி சிகிச்சை பெற வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட, 10வது நாளில், மீண்டும் ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். தொற்று இல்லை என மருத்துவ அறிக்கை வந்தால் மட்டுமே, மருத்துவமனையிலிருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

அதனையடுத்து, இன்று 10 வது நாள் என்பதால், அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட இருக்கின்றன. மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில், அவரது உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றமடைந்து வருகிறது. பிறர் உதவியின்றி நடக்கிறார். தானாக இருக்கையில் அமர்கிறார் என அதில் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, அவருக்கு இன்று நடத்த இருக்கும் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே, அவர் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரியவரும். கொரோனா முடிவுகளில் நெகடிவ் என வந்தால், பெங்களூரிலிருந்து பிப்.5ல் சசிகலா சென்னை திரும்புவார் என தகவல் வெளிவந்துள்ளன. மாநில எல்லையில் அவரை வரவேற்க 2 ஏக்கர் நிலத்தை சமன் செய்து அதற்கான பணிகளை அ.ம.மு.க.,வினர் செய்து வருகிறார்கள்.