ஜெயலலிதாவுக்கு எதிராக சின்னம்மா எந்த சதி திட்டமும் தீட்டவில்லை - ஓபிஎஸ்
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார்.
அவரது மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்திடம் 2-வது நாளாக குறுக்கு விசாரணை நடத்தியது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேற்று ஆஜராகினார்.

அப்போது நடைபெற்ற விசாரணையில்,ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததை தவிர வேறு உபாதைகள் அவருக்கு இருந்தது தனக்கு தெரியாது என்றும்,
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தனக்கு தெரியாது என்றும் மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராக்களை தான் அகற்ற கூறவில்லை என்றும் ஆணையத்தின் விசாரணையில் ஓபிஎஸ் கூறியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இன்றும் விசாரணைக்கு ஆஜராக ஓபிஎஸ்-க்கு ஆணையம் உத்தரவிட்டிருந்ததை அடுத்து அவர் இன்று ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார்.
இன்று நடைபெற்ற விசாரணையில், “ஜெயலலிதாவின் மரணத்தில் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை. அன்றும், இன்றும் சசிகலா மீது தனிப்பட்ட முறையில் மரியாதை உள்ளது” என்று கூறினார்.

மேலும் ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ அவரது குடும்பத்தினரோ எந்தவித சதித் திட்டமும் தீட்டவில்லை எனக் கூறியுள்ளார்.
மேலும் விசாரணை முடிந்து வெளியே வந்த செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை சின்னம்மா என்று குறிப்பிட்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.