மனவேதனையில் சசிகலா.. மதுசூதனன் மறைவுக்கு ஆடியோவில் இரங்கல்...
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் மறைவு தன்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளதாக வி.கே. சசிகலா ஆடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதிமுக அவைத்தலைவரான மதுசூதனனுக்கு கடந்த ஜூலை மாதம் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டர் உதவியுடன் தீவிரச் சிகிச்சைப் பெற்று வந்த அவர் சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று காலமானார்.
அவரின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், சசிகலா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மதுசூதனனின் மறைவு, அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றும், தலைவர் காலத்திலும் சரி, அம்மா காலத்திலும் சரி, எத்தனையோ சோதனையான காலத்திலும் துணை நின்றவர்.
தலைவரிடத்திலும், அம்மாவிடத்திலும் மிகுந்த பாசம் கொண்டவர். தலைவர் ஆட்சிக்காலத்தில் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், அம்மாவின் ஆட்சிக்காலத்தில் அமைச்சராகவும், 2007 ஆம் ஆண்டு முதல் அவைத்தலைவராக இருந்தபோதும் தன்னை ஒரு எளிய தொண்டனாகவே வாழ்ந்து காட்டியவர். திரு மதுசூதனன் மறைவு செய்தி கேட்டு துயரமும், மிகுந்த வேதனையும் அடைந்தேன்.
அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என சசிகலா குறிப்பிட்டுள்ளார்.