திரும்பி வருவேன் சொல்லு: விரைவில் எல்லோரையும் சந்திக்கிறேன் - தொண்டர்களுக்கு சசிகலா நம்பிக்கை!
எல்லாரும் நம் பிள்ளைகள்தான், விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் என சசிகலா தொண்டர்களுக்கு கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சசிகலாவும் சிறைவாசம் சென்றார். இதன் காரணமாக அந்த கட்சியை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் வழி நடத்தி வந்தனர். இவர்களது தலைமையில் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் மற்றும் ஊராட்சி மன்ற தேர்தலும் நடந்தது. நான்கு வருடம் சிறைவாசம் அனுபவித்த சசிகலா கடந்த ஜனவரி மாதம் சிறையில் இருந்து வெளிவந்தார்.
அவர் வெளிவந்த நாளிலிருந்தே பல அதிரடி நடவடிக்கைகள் ஏற்படுமென்று அனைவரும் எதிர்பார்த்தனர். உடனடியாக எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்காமல் அமைதியாக இருந்தார் சசிகலா. அவ்வப்போது அமமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்ஜிஆர் இதழில் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி வந்தார்.

அந்த வகையில் இன்று எல்லோரும் நம் பிள்ளைகள் தான் என்ற தலைப்பில் சசிகலா தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கட்சி வீணாவதை ஒரு நிமிடம் கூட கட்சியை வளர்த்த நம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். எல்லாரும் அஇஅதிமுக பிள்ளைகள்தான்.
புரட்சித்தலைவர் எப்போதுமே கட்சி வித்தியாசமே பார்க்க மாட்டார். இவர்களா? அவர்களா? என்றெல்லாம் பார்க்க மாட்டார். அதையெல்லாம் பார்த்து தான் வளர்ந்து வருகிறோம்.
என்னை பொருத்தவரை எல்லாரும் ஒன்று தான், எல்லாருமே நம் பிள்ளைகள் தான். அஇஅதிமுக என்பது தொண்டர்களின் இயக்கம். அதனை எப்போதும் தொண்டர்கள் நிரூபித்துக் காட்டுவார்கள்.

கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தொண்டர்களிடம் ஒரு தாய் போல் அனுசரணையாக இருந்து காப்பாற்ற வேண்டும். இப்போது அதுபோன்ற சூழ்நிலை இல்லை, விரைவில் வருகிறேன் எல்லோரையும் சந்திக்கிறேன், கவலைப்படாதீர்கள். அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.