சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பு இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

india election tamilnadu dmk
By Jon Mar 03, 2021 03:31 PM GMT
Report

தமிழகம் திரும்பிய பிறகு ஓய்வு எடுத்து வரும் சசிகலாவின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் எனப் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் சசிகலா, அமமுகவை அதிமுக உடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என பாஜக அழுத்தம் தருவதாக செய்திகள் வெளியாகின. பாஜக தலைவர்களும் இதே கருத்தை தெரிவித்து வந்தனர்.

உள்துறை அமைச்சர் இதே விஷயத்தை அதிமுக தலைமையிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இதற்கு தயாராக இல்லை. தற்போது சசிகலா அதிமுகவில் இணைப்பது சாத்தியமே இல்லை என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு தாக்கல் கடைசி நாளான இன்று கூடிய கூட்டம் மூலம் கட்சி எழுச்சியாக உள்ளதை பார்க்கலாம்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்த எழுச்சியை இப்போதும் பார்க்க முடியும். எம்ஜிஆர், ஜெயலலிதா அலை காரணமாக எதிர்க்கட்சிகள் காணாமல் போகும். அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். அதிமுக ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழக மக்களும், கட்சி தொண்டர்களும் செயல்படுகின்றனர்.

எங்களை யாரும் நிர்பந்தம் செய்ய முடியாது. எங்கள் கட்சி உள்விவகாரங்களில் பா.ஜ.க தலையிட்டது இல்லை. அமமுக, சசிகலாவையும் அதிமுகவில் இணைப்பதற்கான எந்த சாத்தியமும் இல்லை. இது தான் உறுதியான நிலை. எங்கள் தலைமையில் கூட்டணி என்பது எள்ளி நகையாடக்கூடியதாக உள்ளது. அதிமுக சிங்கங்கள் கூட்டம்.

அமமுக குள்ளநரிகள் கூட்டம். தினகரன் கருத்தை நகைச்சுவையாக மக்கள் பார்ப்பார்கள். அதிமுக உள் விவகாரங்களில் தலையிடாத கொள்கையை தான் பா.ஜ.க கடைபிடிக்கிறது. சசிகலா, தினகரனை சேர்ப்பது குறித்து யோசனையாக தெரிவித்திருக்கலாம். அதனை நாங்கள் நிராகரித்துவிட்டோம். சசிகலாவை இணைப்பது குறித்து முதல்வரிடம் அமித்ஷா எதையும் தெரிவிக்கவில்லை” என்றார்