சசிகலா வருகை.. அதிமுகவில் சலசலப்பு.. கே.பி. முனுசாமிக்கு எதிராக சரவெடியை கொளுத்திப் போட்ட ஜெயக்குமார்
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் நான்கு ஆண்டுகள் சசிகலா கடந்த ஜனவரி 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த சசிகலா கடந்த ஜனவரி 31 -ம் தேதி மருத்துவமனையில் இருந்தும் விடுதலையானார்.
மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த சசிகலா, ஜெயலலிதா பயன்படுத்திய அதே காரில் அதிமுகவின் கொடியை பறக்கவிட்டவாறு தனது இல்லம் நோக்கி புறப்பட்டார். இது அதிமுகவிற்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு அதிகாரம் என அமைச்சர்கள் வரிசையாக கண்டிக்கத் தொடங்கினர்.
இதனிடையே, டிடிவி தினகரன் தனது தவறுகளை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கடிதம் கொடுத்தால், அதிமுகவில் சேர்ப்து குறித்து கட்சி தலைமை பரிசீலிக்கும் என்று அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்திருந்தார். இதை கேட்டு கொந்தளித்த அமைச்சர் ஜெயக்குமார், இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைக்கும் டிடிவி தினகரனுடன் எப்படி கை கோர்க்க முடியும் என கேள்வி எழுப்பியதுடன், அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்தார்.
மேலும், டிடிவி தினகரன் குறித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியது அவரது சொந்த கருத்து என்றும் சரவெடியை கொழுத்திப்போட்டார். ஒரே கட்சியில் இரு வேறு தலைவர்களின் பதில்களால் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.