சசிகலா மட்டும் அதிமுக கொடியை பயன்படுத்தினால்... அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேச்சு
அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தினால் காவல்துறை தன் கடமையை செய்யும் என அமைச்சர் ஜெயக்குமார் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். தமிழக அமைச்சர் ஜெயக்குமார் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நாளை சசிகலா கொடியுடன் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, ' அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா என்று வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள், எங்களுக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது.
அவருக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது அனைவருக்கும் தெரியும், திட்டமிட்டே பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. அதிமுகவில் கீழ்மட்ட உறுப்பினர்களில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் வரை அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். மீண்டும் அதிமுக ஆட்சி, இந்த குடும்பத்தின் தலையீடு இல்லாமல் மலர வேண்டும் என்பதுதான் நோக்கம்.
முதல்வர் சொன்னதுபோல் இவர்கள் நிராகரிக்கப்பட்டவர்கள், இனி இவர்கள் கட்சிக்கு வர வாய்ப்பே இல்லை. ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட இயக்கம் அதிமுக. சில புல்லுருவிகள் செயலால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.'என்றார்." பொதுச் செயலாளர் நியமனம் குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்... 'உச்சநீதிமன்றமே உயர்ந்த அங்கீகாரம் பெற்றது.
அங்கு அவர்களின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. சட்ட ரீதியாக அணுகுகிறோம், தொண்டர்களை அமைதி காக்க சொல்லிவிட்டு, கொடியை பயன்படுத்த காவல்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீறி கொடியை பயன்படுத்தினால் காவல்துறை தன் கடமையை செய்யும்" என்றார்.