சசிகலா அதிமுகவில் தான் உள்ளார்.. ஒன்றுபட்ட அதிமுகவை வரவேற்கிறோம்.. பாஜக நிர்வாகி பரபரப்பு கருத்து
சசிகலா இன்று தமிழகம் வருவது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பிறகு அதிமுகவில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்பதையே பலரும் எதிர்பார்த்திருக்கின்றனர்.
இந்நிலையில் பா.ஜ.,க மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் கிருஷ்ணகிரியில் நிருபர்களிடம் கூறியதாவது, “தற்போது, 130 கோடி மக்கள் வாழும் இந்தியாவில், எப்படி கொரோனா தடுப்பூசி போட முடியும் என, உலக நாடுகள் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், தடுப்பூசியை கண்டுபிடித்தது மட்டுமின்றி, 35 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி, அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக, 16 லட்சத்து, 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் கொடுக்க திட்டமிட்டுள்ளது. தமிழகத்தை அழிவு பாதைக்கு எடுத்து செல்லக்கூடிய, தி.மு.க., காங்., கூட்டணியை மக்கள் தூக்கி எறிந்து, அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி ஆட்சியை மக்கள் கொண்டு வருவர். ஸ்டாலின், எத்தனை பிரசாந்த் கிஷோர்களை கொண்டு வந்தாலும், அவருக்கு தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். சசிகலா, அ.தி.மு.க.,வில்தான் இருக்கிறார்.
எங்களை பொறுத்தவரை ஒன்றுபட்ட, அ.தி.மு.க.,வை நாங்கள் வரவேற்கிறோம்”அவர் கூறினார்.