'அதிமுகவை காப்பாற்ற வாருங்கள்'- சசிகலாவை வரவேற்று ராஜபாளையத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

Sasikala Admk
By Thahir Jun 27, 2021 10:26 AM GMT
Report

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், 'அழிந்து வரும் அதிமுகவை காப்பாற்ற வாருங்கள்' என சசிகலாவை வரவேற்கும் விதமாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சசிகலா கடந்த சில மாதங்களாக அதிமுகவினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதையடுத்து கட்சியின் விதிமுறைகளை மீறியதாக, அக்கட்சியினர் சிலரை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் நீக்கி உள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை ராஜபாளையத்தில் சசிகலாவை வரவேற்கும் விதமாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த சுவரொட்டியில், 'அழிந்து வரும் அதிமுகவை காப்பாற்ற அம்மாவின் வழியில் தியாக தலைவியே வாருங்கள்' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் சசிகலா புகைப்படம் பெரியதாகவும், இதனை அடுத்து ஜெயலலிதா, எம்ஜிஆர் மற்றும் அண்ணா படங்களும் இந்த சுவரொட்டியில் இடம் பெற்றுள்ளது.இவண் என்னுமிடத்தில் பெயர் இல்லாமல், விருதுநகர் மாவட்ட உண்மை தொண்டர்கள் என அச்சிடப்பட்டுள்ளது. நகரின் பிரதான பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளால் அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.