திமுக படுதோல்வியை சந்திக்கும் - பாஜகவிற்கு தாவிய டாக்டர் சரவணன் ஆவேசம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அன்மையில் திமுகவிலிருந்து பாஜகவுக்கு சென்ற டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏவாக இருந்தவர் டாக்டர் சரவணன். இவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்துள்ளார்.
இந்நிலையில் மதுரையில் உள்ள தனியார் உணவு விடுதியில் டாக்டர் சரவணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், ”ஒவ்வொரு சமூகமும் அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு கோர உரிமை உண்டு. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு சமூக நீதி காப்பாற்றப்படும்.
திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் அங்கு நான் தனித்துவத்தோடு செயல்பட முடியாத நிலை இருந்தது. சுயமரியாதை குறித்துப் பேசுகின்ற திமுகவில் அது இல்லை என்பதுதான் உண்மை. இதுகுறித்து திமுக தலைமையின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றேன் விசாரிக்கிறேன் என்று சொன்னார்களே தவிர எதுவும் செய்யவில்லை.
மதுரை வடக்கு தொகுதி நகர்ப்புறம் சார்ந்த பகுதி ஆகும். இங்கு தேசிய ஜனநாய கூட்டணி சார்பாக யார் நின்றாலும் வெற்றி பெறுவார்கள். ஆகையால் நிச்சயம் இந்த முறை வடக்கில் தாமரை மலரும்.
நான் ஒரு சமூக சேவகர். இந்த ஊழல் குற்றச்சாட்டும் என்மீது விழுந்ததில்லை. ஆகையால் எனக்கு ஒரு தளம் தேவைப்படுகிறது அதன் பொருட்டு நான் பாஜகவோடு இணைந்து செயல்படுகிறேன்” என்றார்.