சரத்குமார், ரவி பச்சமுத்து புதிய கூட்டணி அறிவிப்பு!

people election vote
By Jon Mar 02, 2021 02:20 PM GMT
Report

அதிமுக கூட்டணியிலிருந்து சமத்துவ மக்கள் கட்சியும் திமுக கூட்டணியிலிருந்து இந்திய ஜனநாயக கட்சியும் விலகிமாற்றத்திற்கான புதிய கூட்டணியை உருவாக்கி இருப்பதாக சரத்குமார், ரவி பச்சமுத்து ஆகியோர் அறிவித்திருக்கிறார்கள். சென்னை வடபழனியில் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் நேற்று பத்திரிகையாளருக்கு அளித்த பேட்டி வருமாறு - நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும்.

மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய ஜனநாயகக் கட்சியும் சமத்துவ மக்கள் கட்சியும் முதல் கட்டமாக இணைந்து புதிய மாற்றத்திற்கான கூட்டணியை உருவாக்கியிருக்கிறது. இக்கூட்டணியில் இணைந்து போட்டியிட விரும்பும் கட்சிகளை நாங்கள் வரவேற்கிறோம். கூட்டணியில் இணையக்கூடிய அனைத்து கட்சிகளுமே சமமான தலைமையாகத்தான் இருக்கும்.

எங்கள் கூட்டணி, எல்லா மத, இன மக்களை ஒன்றாக பார்க்கும் தன்மை கொண்டதாக இருக்கும். எங்களுடன் இணைய விரும்புபவர்கள் மக்கள் நலன் முன்னிறுத்துபவர்களாக இருக்க வேண்டும். நாங்கள் ஒத்த கருத்து உடையவர்களாக இருக்கின்றோம். எங்களை போல் எண்ணம் கொண்ட பலர் உள்ளனர். அவர்களையும் கூட்டணியில் இணையுமாறு அழைக்கிறோம்.

ரஜினி மக்கள் மன்றத்தில் தேர்தலில் போட்டியிட விரும்பினால் எங்கள் கூட்டணிக்கு வரலாம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மக்களுக்கான முதன்மை கூட்டணியை உருவாக்க இருக்கிறோம். பாரிவேந்தர் எவ்வளவு நல்லது செய்தாலும் அந்த பெயர் திமுகவிற்கு தான் செல்கிறது. எங்களுக்கும் கட்சிக்கும் அங்கீகாரம் வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்கள்.