சரத்குமார், ராதிகாவுக்கு ஓராண்டு சிறை: செக் மோசடி வழக்கில் நீதிமன்றம் உத்தரவு
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், நடிகை மற்றும் தயாரிப்பாளர் ராதிகா ஆகியோருக்கு செக் மோசடி வழக்கில் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. இது என்ன மாயம் பட தயாரிப்புக்காக ரேடியன்ஸ் நிறுவனத்திடம் இருந்து ராதிகாவின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் ரூ. 1.5 கோடி வாங்கியிருந்தது.
கடனை திருப்பியளிப்பதில் மேஜிக் பிரேம் நிறுவனம் செக் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்நிறுவனத்தின் பங்குதாரர்களாக சரத்குமார், ராதிகா சரத்குமார் உள்ளனர். ரேடியன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட காசோலை பணம் இல்லாததால் திரும்பியது. இதனால் நடிகர் ராதிகா மற்றும் சரத்குமார் மீது செக் மோசடி வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கில் நேரில் ஆஜராக வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் சரத்குமார், ராதிகா நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

அதில் செக் மோசடி செய்யவில்லை என்றும் இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்குமாறும் தெரிவித்திருந்தனர். இந்த விளக்கத்தை ஏற்க மறுத்தை நீதிமன்றம் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் செக் மோசடி செய்திருப்பது உறுதியாகிருப்பதாகக்கூறி இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்தது.
மோசடி வழக்கில் சரத்குமாருக்கு 7 வழக்குகளில் தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை எம்பி எம்எல்ஏ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராதிகாவுக்கு 2 வழக்குகளில் தலா ஒரு வருடமும் மேஜிக் பிரேம் நிறுவன பங்குதாரர் லிஸ்டன் ஸ்டீபனுக்கு 2 வழக்குகளில் ஒரு வருடமும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி சரத்குமார் தரப்பு மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.