ஆதங்கத்துக்கு நிவர்த்தி கிடைக்கும்- நயினார் நாகேந்திரனை சந்தித்த சரத்குமார் நம்பிக்கை
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை இன்று சந்தித்த சரத்குமார், தனது ஆதங்கத்திற்கு நிவர்த்தி கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், 2024 மக்களவைத் தேர்தலின் போது தனது கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்தார். அதன்பின் பாஜகவில் தொடர்ந்து செயல்பட்டு வந்தாலும், அவருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் பெரிய அளவில் பொறுப்புகள் வழங்கப்படவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் சென்னை தியாகராயநகரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அவரது தொண்டர்கள் “சரத்குமாருக்கு உடனடியாக பொறுப்பு வழங்க வேண்டும், இல்லையெனில் பாஜகவிலிருந்து விலகத் தயாராக உள்ளோம்” எனக் கூறினர்.

அதனைத் தொடர்ந்து சரத்குமார், “நான் கட்சியில் இணையும் போது தேசிய அளவில் பொறுப்புகள் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி மட்டுமே கிடைத்தது. நம்முடைய பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. உடனடியாக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் முறையிடுவேன்” என தெரிவித்தார்.
இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், சரத்குமார் திங்கட்கிழமை (23 மார்ச்) காலை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து தனது கோரிக்கைகளை முன்வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நேற்று வைத்த வேண்டுகோளின் அடிப்படையில் கோரிக்கைகளை கொடுத்துவிட்டேன். நயினார் நாகேந்திரன் ‘நீங்கள் சொல்வது நியாயம்தான், பரிசீலிக்கிறேன்’ என்று உறுதி அளித்தார்.
எனவே, நான் சொன்ன ஆதங்கத்துக்கு நிவர்த்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” எனக் கூறியுள்ளார்.