"அய்யோ...நண்பா” - புனீத் ராஜ்குமார் உடலை பார்த்து கதறி அழுத சரத்குமார்
மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் உடலுக்கு நடிகர் சரத்குமார் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், ரசிகர்களால் செல்லமாக பவர் ஸ்டார் என்றழைக்கப்படுபவருமான புனீத் ராஜ்குமாரின் திடீர் மறைவு யாராலும் நம்ப முடியாத ஒன்றாக உள்ளது. நேற்று காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து பெங்களூருவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. புனீத் ராஜ்குமாரின் உடல் திரையுலக பிரபலங்கள், ரசிகர்களின் அஞ்சலிக்காக கண்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. பல மொழிகளைச் சேர்ந்த பல முன்னணி திரையுலக பிரபலங்கள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் புனீத் ராஜ்குமாரின் உடலை பார்த்து நடிகர் சரத்குமார் கதறி அழுத காட்சிகள் காண்போரை கலங்க வைத்துள்ளது.
முன்னதாக புனீத் ராஜ்குமார் மறைவு தொடர்பாக சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில், "எனது இனிய நண்பர் புனித் ராஜ்குமார் மறைந்துவிட்டார் என்ற நம்பமுடியாத செய்தியைக் கேள்விப்பட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். நான் சந்தித்த மிகச்சிறந்த மனிதர்களில் ஒருவர். நமது நாட்டின் ஒட்டுமொத்தத் திரைத்துறையைக் குறிப்பாக கர்நாடக திரைத் துறையினரை இந்த சோகத்திலிருந்து தேற்ற, ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை.
விதியின் மர்மமான வடிவம், திரைத்துறையை மட்டுமல்ல, புனீத்தின் ஒட்டுமொத்த நண்பர்கள் உலகத்தையும் புரிந்துகொள்ள முடியாத சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும், சக நடிகர்களுக்கும், ரசிகர்களுக்கும், கர்நாடக மக்களுக்கும் எங்களின் மனமார்ந்த அனுதாபங்கள். உன் இழப்பை நாங்கள் உணர்வோம். நீ என்றும் எங்கள் நினைவுகளில் வாழ்வாய் புனீத்” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
You May Like This