சிகரெட் பிடிப்பதை நிறுத்து. நீ நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று சொல்வார் சரத்பாபு - ரஜினி உருக்கம்..!
‘சிகரெட் பிடிப்பதை நிறுத்து. நீ நீண்ட நாட்கள் வாழ வேண்டும்’ என்று சொல்வார் நடிகர் சரத்பாபு என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி
நடிகர் சரத்பாபு நேற்று பிற்பகல் உடல் நலக்குறைவு காரணமாக ஐதரபாத்தில் காலமானார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,
என் மீது அக்கறை கொண்டவர்
‘’ நடிகர் சரத்பாபுவை நான் நடிகன் ஆவதற்கு முன்பே எனக்கு நன்றாகத் தெரியும். நல்ல நண்பர். அருமையான மனிதர். எப்போதுமே சிரித்த முகத்துடனேயே இருப்பார்.
நானும் அவரும் சேர்ந்து நடித்த அனைத்துப் படங்களும் ஹிட் தான். முள்ளும் மலரும், முத்து, அண்ணாமலை, வேலைக்காரன் என எல்லாமே. என் மீது அவருக்கு அளவுகடந்த அன்பும் பிரியமும். நான் சிகரெட் பிடிப்பதை பார்த்து வருத்தப்படுவார். ‘சிகரெட் பிடிப்பதை நிறுத்து. நீ நீண்ட நாட்கள் வாழ வேண்டும்’ என்று சொல்வார். அவர் முன்னால் நான் சிகரெட் பிடிக்க மாட்டேன்.
அண்ணாமலை படத்தில் ஒரு பெரிய வசனக்காட்சி இருந்தது எனக்கு சரியாக நடிக்க வராமல் 10, 15 டேக் சென்று கொண்டிருந்த போது, அந்த எமோஷனை அவ்வளவு அழகாக நடித்துக் காட்டினார். ‘நீ உடம்ப நல்ல பாத்துக்கோ, நீ நல்ல இருக்கணும்’ என்று சொன்னவர் இன்று இல்லை என்பது வருத்தமாக உள்ளது. மிகவும் நல்ல மனிதர். அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்" என்றார்.