பணிப்பெண்ணை நீச்சல் குளத்தில் தள்ளி விட்ட பிரபல நடிகை - ரசிகர்கள் கண்டனம்
நடிகை சாரா அலிகான் பணிப்பெண்ணை நீச்சல் குளத்தில் தள்ளி விட்ட சம்பவத்திற்கு ரசிகர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆனந்த் எல். ராய் இயக்கிய அத்ரங்கி ரே படத்தில் நடிகர் தனுஷின் மனைவியாக நடித்த பிரபல நடிகை சாரா அலிகான் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்தார். அப்பொழுது ரசிகர் ஒருவர் நீங்கள் செய்த மோசமான பிராங்க் எது? என்ற கேள்வியை எழுப்பினார்.
அதற்கு சாரா அலி கான் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் பணிப்பெண் ஒருவரை அவர் எதிர்பாராத நேரத்தில் நீச்சல் குளத்தில் தள்ளிவிட்ட சாரா அலிகான் ஜாலியாக நீச்சல் அடிக்கும் காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தது.
இதனைக் கண்ட இணையவாசிகளும், ரசிகர்களும் அதிருப்தியில் சாரா அலிகானை கண்டபடி விமர்சிக்க தொடங்கினர். இது காமெடி இல்லை. உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை சாரா. கேவலமான செயல். உங்களுக்கு ஜாலியாக இருக்க அந்த பெண்ணை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறீர்கள். நடிகை என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று யார் சொன்னது என சரமாரியாக விமர்சித்துள்ளனர்.