கடவுள் அளித்த திறமையை வீணாக்காதப்பா : இளம் வீரருக்கு கவாஸ்கர் அறிவுரை

sanjusamson sunilgavaskar
By Irumporai Sep 23, 2021 08:41 AM GMT
Report

கடவுள் அளித்த திறமையை வீணடிக்க வேண்டாம் என ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு முன்னாள் வீரர் கவாஸ்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.

2015-ல் இந்தியாவுக்காக விளையாட ஆரம்பித்த சஞ்சு சாம்சன், ஒரு ஒருநாள், 10 டி20 ஆட்டங்களில் மட்டும் இடம்பெற்றுள்ளார். ஐபிஎல் 2021 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார்.

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய சஞ்சு சாம்சன் 27, 7, 0 என மிகவும் சுமாராக விளையாடினார். பஞ்சாப்புக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் 26 வயது சஞ்சு சாம்சனின் பேட்டிங் பற்றி முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியதாவது:

சஞ்சு சாம்சன் இதுவரை  தொடக்க வீரராகக் களமிறங்கியதில்லை. 2-வது நிலை, 3-வது நிலை வீரராகவே களமிறங்குவார். முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து பந்தை மைதானத்தை வெளியே அனுப்பத் துடிக்கிறார். இது வாய்ப்பே இல்லை. அருமையான ஃபார்மில் இருந்தாலும் இதைச் செய்ய முடியாது. முதலில் சில ரன்கள் ஓடி எடுத்துவிட்டு, கால்கள் சரியாக நகர ஆரம்பித்தவுடன் அதிரடியாக விளையாட ஆரம்பிக்கலாம். ஆடுகளத்துக்குள் வந்தவுடன் சிறிது நேரத்துக்குப் பிறகு சிக்ஸர் அடிக்க முயற்சி செய்யலாம். ஷாட் தேர்வுகளில் அவர் கவனம் செலுத்தவேண்டும்.

இல்லாவிட்டால் கடவுள் அளித்த திறமையை வீணடித்தது போலாகும். மனநிலையைக் கொண்டு தான் ஷாட் தேர்வுகள் அமையும். அதில் கவனம் செலுத்தினால் மட்டுமே பக்குவம் அடைந்த வீரருக்கும் அது இல்லாதவருக்கும் உள்ள வித்தியாசம் தென்படும். இந்திய அணிக்காகத் தொடர்ந்து விளையாட வேண்டும் என விரும்பினால் ஷாட் தேர்வுகளில் சஞ்சு சாம்சன் கவனம் செலுத்த வேண்டும் என்றார்