‘இந்தி பேச முடியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்’ - அமைச்சரின் கருத்தால் புதிய சர்ச்சை
இந்தி பேச முடியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என உத்திர பிரதேச மாநில அமைச்சர் சஞ்சய் நிஷாத் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அண்மையில், கேஜிஎஃப்-2 படத்தின் வெற்றி குறித்து பட விழா ஒன்றில் பேசிய கன்னட நடிகர் கிச்சா சுதீப், ‘ஒரு கன்னட படம் பான்-இந்தியா படமாக எடுக்கப்பட்டது என்று எல்லோரும் கூறுகிறார்கள், ஆனால் ஒரு சிறிய திருத்தம், இந்தி இனி தேசிய மொழி அல்ல. பாலிவுட்டும் பல பான்-இந்தியா திரைப்படங்களைத் தயாரிக்கிறது.
அவை தெலுங்கு மற்றும் தமிழில் வெளியிடப்படுகின்றன. ஆனால் வெற்றி பெற போராடுகின்றன. இன்று நாம் எங்கு வேண்டுமானாலும் ஓடக்கூடிய படங்களைத் தயாரித்து வருகிறோம்’ என தெரிவித்திருந்தார்.
அவருக்கு ட்விட்டரில் பதில் அளித்த பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ‘உங்களை பொறுத்தவரையில் இந்தி தேசிய மொழி இல்லை என்றால், ஏன் உங்கள் தாய் மொழி படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்? எப்போதும் இந்தி தான் நமது தாய் மொழியாகவும் தேசிய மொழியாகவும் இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அஜய் தேவ்கனின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் அவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த விவகாரம் இப்பொழுது பெரிய விவாத பொருளாக மாறியுள்ள நிலையில் பலரும் தங்களது கருத்துக்களை பரிமாறி வருகின்றனர்.
அதன்படி இந்திக்கு ஆதரவாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர் சஞ்சய் நிஷாத், “நீங்கள் இந்தியாவில் வசிக்கிறீர்கள் என்றால் இந்தியை நேசிக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் வெளிநாட்டவராக கருதப்படுவீர்கள். இந்தி பேச முடியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறி வேறு எங்காவது செல்லுங்கள்” என்று கூறியுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.