"ரஹானேவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கக்கூடாது, இளம் வீரர்கள் அவர் இடத்தை நிரப்ப காத்திருக்கிறார்கள்” - சஞ்சய் மஞ்சரேக்கர்

அஜிங்கிய ரஹானேவுக்கு இனிமேலும் டெஸ்ட் போட்டியில் வாய்ப்புக் கொடுக்கக்கூடாது.

கடந்த 4 ஆண்டுகளாக அவர் பேட்டிங்கில் ஏதும் செய்யவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கத் தொடர் முழுவதுமே புஜாரா, ரஹானேவுக்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பாக இருக்கும் என கூறப்பட்டது.

ஆதலால், அச்சப்பட்டு ஓரளவுக்கு ஸ்கோர் செய்வார்கள் என எதிர்பார்த்த தேர்வாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அதிலும் ரஹானே கடந்த 2 டெஸ்டிலும் ஒரே மாதிரியாகவே ஆட்டமிழந்தது பேட்டிங்கில் அவர் முற்றிலும் முழுங்கிவிட்டார், ஃபார்மின்றி உள்ளார் என்பதையே காட்டுகிறது.

மூத்த வீரர்களான புஜாரா, ரஹானே மீதான அனைத்து நம்பிக்கைகளும் தூள்தூளாக நொறுக்கிவிட்டன. இந்தத் தொடருக்குப் பின்பும் மூத்த வீரர்களான இருவருக்கும், ஏன் விராட் கோலிக்கும் வாய்ப்பு அளிப்பது இளம் வீரர்களுக்கு செய்யும் துரோகம்.

ஆதலால், இந்த 3 வீரர்களையும் அணியிலிருந்து ஓரங்கட்டி, உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட வைத்த ஃபார்முக்குத் திரும்பியபின் அழைக்கலாம். அதுவரை காத்திருப்பில் இருக்கும் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கலாம்.

ரஹானே, புஜாரா இருவருக்கும் இந்திய அணியில் மிகப்பெரிய பிரேக் கிடைக்கப் போகிறது உறுதியாகிவிட்டது, அல்லது ரஹானே டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

இந்நிலையில் கிரிக் இன்ஃபோ நிகழ்ச்சியில் முன்னாள் வீரர் மஞ்சரேக்கர், தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கல்லினன் ஆகியோர் பங்கேற்றனர்.

அதில் மஞ்சரேக்கர் பேசுகையில்,

'ரஹானே இரு இன்னிங்ஸிலும் ஆட்டமிழந்த பந்துகள் மிகத்துல்லியமான பந்துகள். இந்த பந்தை விளையாட முடியாதபோத ரஹானேவின் பேட்டிங் ஃபார்ம் மழுங்கிவிட்டது தெரிகிறது. ரஹானேவுக்கு இனியும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கக்கூடாது.

அவரை உள்நாட்டு ரஞ்சிக் கோப்பையில் விளையாடவைத்து ஃபார்முக்கு கொண்டுவந்து நம்பிக்கையை உண்டாக்க வேண்டும். ஆனால், புஜாரா மீது நம்பிகக்கை இருக்கிறது. கடந்த 3 அல்லது 4 ஆண்டுகளாக ரஹானே பேட்டிங்கில் ஏதாவது செய்திருக்கிறாரா.

பேட்டிங் ஃபார்முக்கு வந்துவிடுவார் என்று எதிர்பார்த்தோம். மெல்போர்னில் சதம் அடித்து நம்பிக்கையை ஏற்படுத்தினார் அதன்பின் பெரிதாக ஏதும் இல்லை.

கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ரஹானேவின் பேட்டிங் ஃபார்ம் இரு நாடுகள் விளையாடும் டெஸ்ட் தொடரில் 5 முறை 25 ரன்களுக்கு கீழ்சராசரி சென்றுள்ளது.

நியூஸிலாந்து, இங்கிலாந்து தொடரிலும் ரஹானே ஜொலிக்கவில்லை ரஹானே போன்று அணியிலிருந்து தூக்க வேண்டிய மற்றொரு இளம் வீரர் மயங்க் அகர்வால்.

அகர்வால், ரஹானே இருவருமே அணியில் நீடிக்கக் கூடாது. நான் ராகுல் திராவிட்டாக இருந்தால், இருவரையும் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு நீக்கிவிடுவேன்.

ரஹானேவுக்கு அணியில் வாய்ப்பு முடிந்துவிட்டது என நினைக்கிறேன். இளம் வீரர்கள் ரஹானே இடத்தை நிரப்ப காத்திருக்கிறார்கள்” என தெரிவித்தார்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்