விசிகவில் அதிரடி நடவடிக்கை: சங்கத்தமிழன் 3 மாதங்கள் நீக்கம்! விளக்கம் அளித்த திருமாவளவன்

Thol. Thirumavalavan Tamil nadu
By Vinoja Jun 07, 2026 06:30 AM GMT
Report

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளையோர் அமைப்பான ‘இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை’ துணை அமைப்பின் மாநிலச் செயலாளரான பொறியாளர் சரவணன் என்கின்ற சங்கத்தமிழன், கட்சியிலிருந்து மூன்று மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மேலும், சங்கத்தமிழன் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கான 10 காரணங்களையும் அவர் விரிவாகப் பட்டியலிட்டுள்ளார். இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது,

விசிகவில் அதிரடி நடவடிக்கை: சங்கத்தமிழன் 3 மாதங்கள் நீக்கம்! விளக்கம் அளித்த திருமாவளவன் | Sangathamizhan Suspended Thirumavalavan Explan

1) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளையோர் அமைப்பான 'இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை' என்னும் துணைநிலை அமைப்பின் மாநில செயலாளர் பொறியாளர் சரவணன் என்கிற சங்கத்தமிழன் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

2) கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்கள் குறித்து கட்சிக்குள்ளேயே பேசவேண்டிய முரண்களைப் பொதுவெளியில் பேசி, கட்சிக்கும் கட்சியின் தலைமைக்கும் தேவையற்ற நிர்வாக நெருக்கடிகளை உருவாக்கி வருகிறார்

3) தேர்தலுக்கு முன்பு 'மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்' நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில், அவ்வப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடுகளுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பரப்பும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார். இப்போதும் கருத்து மாறுபாடுகளைக் கடந்து பேணவேண்டிய தோழமைக்கான மதிப்பீடுகளைச் சிதைக்கும் வகையில், ஊகமான கருத்துகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

4) கட்சியின் நலன்களுக்கு எதிரான அவரது நடவடிக்கைகள் குறித்து, கட்சியின் முன்னணி பொறுப்பாளர் என்கிற முறையில், அவருக்கு அவ்வப்போது சுட்டிக்காட்டி, உரிய நேரத்தில்- உரிய வகையில், 'கடிந்தும் -கண்டித்தும்' அறிவுறுத்தப்பட்டது. எனினும், அவரது நடவடிக்கைகளில் எத்தகைய மாற்றமும் இல்லை.

5) வாய்மை, நேர்மை என்னும் பெயரில் உட்கட்சி முரண்களை பொதுவெளியில் பேசுவது, கட்சியின் கட்டுக்கோப்பான வலிமையை அசைத்துப் பார்க்கும் ஆபத்தான முயற்சியாகும். அத்துடன், கட்சியைப் பின்பற்றி அரசியல் சக்தியாய் அணிதிரளும் அடித்தட்டு மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் மிகவும் தீங்கான போக்காகும்.

6) கட்சியை விட, கருத்தியலை விட, களம் காணும் மக்களைவிட, 'தானே முதன்மை' என தன்னை முன்னிறுத்தும் இத்தகையபோக்கு, ஒரு 'தவறான முன்மாதிரியாக' அமைந்து கட்சியிலுள்ள பிறரையும் இவ்வாறு செயல்படத் தூண்டுவதாக அமையும்.

7) இந்நிலையில், கட்சியின் நலன்களைக் கருத்தில்கொண்டு பொறியாளர் சரவணன் என்கிற சங்கத்தமிழன் அவர்கள், "கட்சியிலிருந்து மூன்று மாத காலத்திற்கு இடை நீக்கம் செய்யப்படுகிறார்." இந்த நடவடிக்கை தொடர்பாக இவர் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் விளக்கமளிக்கவும் அல்லது கட்சித் தலைமையிடம் மேல்முறையீடு செய்யவும் இவருக்கு உரிமையுண்டு.

9) இடைநீக்க காலத்தில் இவர் கட்சியின் விதிமுறைகளை மதித்து, மேலும் முரண்பாடான செயல்களில் ஈடுபடாமல், கட்சியின் கட்டுப்பாட்டைக் காப்பதன் மூலமே, இவரது மேல்முறையீடு ஏற்கப்பட்டு, இடைநீக்க நடவடிக்கை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.

10) ஒழுங்கு நடவடிக்கைக்குரிய காலத்தில் இவர் கட்சியின் நிகழ்வுகளில், போராட்டங்களில், கட்சி சார்ந்த இன்னபிற செயற்பாடுகளில் ஈடுபடாமல் தவிர்க்க வேண்டியது இவரது இன்றியமையாத அரசியல் கடமையாகும். என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.