இவனுக்கு நடிக்கிற ஆசையே வரக்கூடாது என என்னை மிதித்தார்கள் - சமுத்திரக்கனி உருக்கம்
தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து சமுத்திரக்கனி மனம் திறந்து பேசியுள்ளார்.
சமுத்திரக்கனி
தமிழ் சினிமாவில் சுப்ரமணியபுரம், அப்பா, வட சென்னை, துணிவு போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் சமுத்திரக்கனி. நடிப்பதோடு மட்டுமின்றி சில படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில், திரு.மாணிக்கம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 27 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
மிதித்தார்கள்
இந்த படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சினிமா துறையில் ஆரம்ப காலத்தில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
இதில் பேசிய அவர், நான் நடிக்க வந்த புதிதில் சின்னத்திரை தொடர் ஒன்றில் நடித்து வந்தேன். அவர்களுக்கு என்னை பிடிக்கவில்லை. நடிகர் என்னை மிதிப்பது போல் ஒரு காட்சி இருந்தது. அப்போது ஒல்லி நடிகர் ஒருவர் உடன் நடிப்பவரிடம், நீ இவனை மிதிக்கின்ற மிதியில் இவனுக்கு நடிக்கிற ஆசையே வரக்கூடாது என கூறினார்.
அவர்கள் பேசியது எனக்கு அப்போது தெரியாது. அந்த காட்சி படமாக்கப்பட்ட போது, அவர் மிதித்த மிதியில் நான் வெகு தூரம் சென்று விழுந்தேன். ஆனால் நான் சினிமாவை விட்டு ஓடவில்லை. அதன் பிறகு இப்போது பார்த்தாலும் அந்த நடிகர் என்னிடம் மன்னிப்பு கேட்பார்" என உருக்கமாக பேசினார்.