எவ்வளவு நீர் கொட்டினாலும் நிரம்பாத அதிசய கிணறு - ஆர்வத்தோடு பார்த்து செல்லும் ஊர் மக்கள்

Study samugam Wonder well
By Nandhini Dec 02, 2021 11:25 AM GMT
Report

பெருமழை பெய்தபோதும் கூட கிணறு ஒன்றில் நீர் நிரம்பததால் மக்கள் அதிசய கிணற்றை வந்து பார்த்து விட்டு செல்கின்றனர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை அடுத்த ஆயன்குளம் பகுதியில் கிணறு ஒன்று உள்ளது.

கடந்த சில வாரங்களாக திருநெல்வேலி மாவட்டத்தில் பருவமழையின் காரணமாக கனமழை கொட்டித் தீர்த்து வந்தது. இதனையடுத்து, கோட்டைக்கருங்குளம் நம்பியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால், 50 கன அடி நீர் இந்த கிணற்றினுள் பாயும்போது கிணறு நிரம்பாமல் இருந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

இந்நிலையில், கிணற்றுக்குள் செல்லும் தண்ணீர், இப்பகுதியை சுற்றியுள்ள இடங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயரவும், உப்பு நீர் அதிகரிப்பதை கட்டுப்படுத்தவும் துணை புரிவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளச் சேதத்தைத் தடுக்க அரசால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரியான அபூர்வா, நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் இந்த கிணற்றை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.

இதனையடுத்து, சென்னை ஐஐடி பேராசிரியர்களை கொண்ட நிபுணர்கள் குழு இன்று திசையன்விளை அருகே உள்ள ஆயன்குளம் அதிசய கிணற்றை ஆய்வு செய்து வருகிறார்கள். இச்செய்தி அப்பகுதியில் தீயாய் பரவ ஏரளாமான பொதுமக்கள் அக்கிணற்றை வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

இது குறித்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.