‘இங்கு வியாபாரம் செய்யக்கூடாது...’ - குறவர் இன பெண்கள் மீது தண்ணீர் ஊற்றி விரட்டிய வீடியோ வைரல்
பழனியில் சாலையோரத்தில் அமர்ந்துக் கொண்டு வியாபாரம் செய்த நரிக்குறவர் இன பெண்கள் மீது தண்ணீர் ஊற்றி விரட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பழனி முருகன் கோவிலில் கார்த்திகை மாதம் முதல் பங்குனி உத்திரம் வரை பக்தர்கள் வருகை அதிகளவு இருக்கும். இதனால், பழனி அடிவாரம் முழுவதும் ஏனாளமானோர் வியாபாரம் செய்ய குவிவது வழக்கம்.
இந்நிலையில், சபரிமலை பக்தர்கள் வருகை அதிகரித்ததால், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்துள்ள ஏராளமானோர் பழனியில் தங்கி வியாபாரம் செய்து வருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டத்திலிருந்து நரிக்குறவர் இனத்தை சேர்ந்த இளம்பெண் விஜயசாந்தி என்பவரும், பழனியில் தங்கி பாசி வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் நேற்று காலை பழனி மலைக்கோவில் எதிரேயுள்ள சுபம் ஹோட்டல் சாலையில் சாலையோரத்தில் அமர்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அவர் அமர்ந்திருந்த இடத்தின் அருகேயுள்ள வீட்டின் மாடியிலிருந்து பெண் ஒருவர் தண்ணீரை ஊற்றி விரட்டியிருக்கிறார்.
மேலும், அங்கு அமர்ந்து வியாபாரம் செய்யக்கூடாது என்று அவர் சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் விஜயசாந்தி கூறுகையில், அந்த வீட்டின் மாடியிலிருந்து தண்ணீர் ஊற்றிய பெண், அங்கு யாரும் உட்கார்ந்து வியாபாரம் செய்யக்கூடாது என்று சத்தம் போட்டதாகவும், மீறி உட்கார்ந்தால் தண்ணீர் ஊற்றிவிடுவதாகவும் கூறினார்.
சாலையில் தங்கி பாசி மற்றும் மாலை வியாபாரம் செய்யும் தங்கள் மீது இப்படி தண்ணீர் ஊற்றி துரத்துவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.