தனக்கு வாக்களிக்காதவர்களை எச்சிலை நக்க வைத்து கொடுமை - தேர்தலில் தோற்றவர் வெறியாட்டம்

samugam viral-video- traumatic-event
By Nandhini Dec 13, 2021 07:04 AM GMT
Report

பட்டியலின பிரிவைச் சேர்ந்த 2 பேரை சாலையில் வைத்து திட்டிய பல்வந்த் சிங், அவர்களை அடித்து, சாலையில் எச்சிலை துப்பி, அதை அவர்கள் இருவரையும் நக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பட்டியலினத்தைச் சேர்ந்த 2 பேரை எச்சிலை துப்பி அதை நக்கவைத்த கொடூரம் அரங்கேறி இருக்கிறது.

இந்த வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில், கிராம பஞ்சாயத்து ஒன்றில் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பல்வந்த் சிங் என்பவர் போட்டியிட்டார். ஆனால், இந்த போட்டியில் அவர் தோல்வி அடைந்தார்.

இதனால், ஆத்திரம் அடைந்த பல்வந்த சிங், பட்டியலின மக்கள் தனக்கு வாக்களிக்காதது தான், தனது தோல்விக்கு காரணம் என்று கோபமடைந்தார். இந்நிலையில், அந்த ஊரைச் சேர்ந்த பட்டியலின பிரிவைச் சேர்ந்த 2 பேரை பிடித்து, சாலையில் வைத்து அவர்களை திட்டியுள்ளார். பின்னர், அவர்களை அடிக்கவும் செய்துள்ளார்.

அடித்ததோடு அல்லாமல், அந்த 2 பேரையும், சாலையில் எச்சிலை துப்பி, அதை அவர்கள் இருவரையும் நக்க வைத்திருக்கிறார். மேலும் காதுகளை பிடித்துக் கொண்டு இருவரும் உட்கார்ந்து எழ மிரட்டி பணிக்கப்பட்டனர். வாக்களிக்க பணம் தந்தும் இவர்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்று அருகில் இருப்போரிடம் பல்வந்த் சிங் அந்த வீடியோவில் கூறுகிறார்.

இந்த காட்சியை ஒருவர் வீடியோவாக எடுத்து, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ விவகாரம் பூதாகரமாக வெடித்தள்ளது. தற்போது, இச்சம்பவத்தில் தொடர்புடைய பல்வந்த் சிங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட எஸ்பி கந்தேஷ் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.