விவசாயிகளை இடித்து தள்ளியபடி செல்லும் கார்கள் - நெஞ்சை பதற வைக்கும் வீடியோவை வெளியிட்டது காங்கிரஸ்

samugam
By Nandhini Oct 05, 2021 04:42 AM GMT
Report

லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் போராடிய போது அவர்கள் மீது கார்கள் வரிசையாக ஏறிச்செல்லும் அதிர்ச்சி வீடியோவை காங்கிரஸ் தற்போது வெளியிட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் சொந்த ஊர், உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரிக்கு அருகே உள்ள திக்குனியாகம். இந்நிலையில், நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்தார்.

இதனை அறிந்த விவசாயிகள் சங்கத்தினர், புதிய வேளாண் சட்டங்களை ரத்துச் செய்யக்கோரி அவருக்கு கருப்புக் கொடி காட்ட திரண்டிருந்தனர். அப்போது மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா துணை முதல்வரை வரவேற்க தனது காரில் சென்றுள்ளார்.

அவரது காரையும் மறித்து காரின் முன் திரண்டு விவசாயிகள் கோஷங்கள் எழுப்பியதாக கூறப்படுகிறது. அப்போது, அவர்களை இடித்து தள்ளியபடி அங்கிருந்து காரை ஆஷிஷ் மிஸ்ரா எடுத்துச் சென்றார். இதில் விவசாயிகள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஆஷிஷ் மிஸ்ராவின் காரை அடித்து நொறுக்கினர். அதோடு, காரை தீயிட்டு கொளுத்தினார்கள். இச்சம்பவத்தால் லக்கிம்பூரில் கடும் பதற்றம் நிலவியது.

இந்நிலையில், அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களை கலைத்தபோது வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் லக்கிம்பூரில் கார் மோதி 4 விவசாயிகளும், தொடர்ந்து நடைபெற்ற வன்முறை மோதலில் 4 பேரும் என மொத்தம் 8 பேர் உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்பட 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ரா மகன் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்தில் என் மகன் இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறியிருந்தார். இச்சம்பவம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உறுதி அளித்தார்.

இந்நிலையில், கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது அமைச்சருடன் வந்த கார்கள் மோதும் வீடியோவை காங்கிரஸ் அதன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் சாலையில் நிற்கும் விவசாயிகள் பின்புறம் வழியாக வேகமாக வரும் கார் அவர்கள் மீது ஏற்றிவிட்டு நிறுத்தாமல் செல்கிறது. தொடர்ச்சியாக இரண்டு கார்கள் அதேபோல செல்கின்றன. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்ப்பவர்கள் நெஞ்சம் பதற வைக்கின்றது.

உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.45 லட்சம் இழப்பீடு தொகையும் வழங்குவதாக அம்மாநில அரசு உறுதி அளித்துள்ளது. மேலும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. மாநில அரசு உறுதியளித்ததை தொடர்ந்து, விவசாயிகள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றிருக்கிறார்கள்.