செல்போனில் பேசிக்கொண்டே தேசியக்கொடியை ஏற்றிய நபர் - வலுக்கும் கண்டனங்கள்
ஒரு கையில் செல்போன் பேசிக்கொண்டு மறு கையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த ஊராட்சித் தலைவரின் கணவரின் செயலால் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே ராமச்சந்திரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
தலைமை ஆசிரியர் மற்றும் ஊராட்சித் தலைவர் வளர்மதி தலைமையில் இந்த குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. ஊராட்சி தலைவர் வளர்மதி சார்பாக அவரது கணவர் குணசேகரன் கொடியை ஏற்றி வைத்தார்.
ஆனால், இடது கையில் செல்போன் பேசிக் கொண்டே வலது கையால் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் குணசேகரன்.
தலைமையாசிரியர், ஊராட்சி தலைவர் அருகில் இருக்க எந்த பதவியிலும் இல்லாத தனிநபர் கொடியை ஏற்றியதுடன் அதையும் செல்போனில் பேசியபடியே ஒரே கையில் ஏற்றியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் கொடுக்கப்பட்டது. இது குறித்து, விரைவில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.