CBSE பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற யோகா பாட்டி நாணம்மாள்!
CBSE பிளஸ் 1 உடற்கல்வி குறித்த பாடப்புத்தகத்தில் கோவையை சேர்ந்த யோகா பாட்டி நாணம்மாள் குறித்த தகவல் இடம்பெற்றிருக்கிறது. கோவை கணபதி பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த நானம்மாள். இவர் 8 வயது சிறுமியாக இருக்கும்போது தனது தந்தையிடமிருந்து யோகாசனம் கலையை கற்றுக் கொண்டார்.
சுமார் 90 ஆண்டுகளாக அவர் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவரிடம் பலரும் யோகாசனம் பயிற்சிகளை கற்றுக் கொண்டு வருகிறார்கள். இதனிடையே இவரின் திறமையும் சேவையும் பாராட்டி மத்திய அரசு கடந்த 2018ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இது கோவை மக்களிடையே மட்டுமின்றி தமிழக மக்களிடையிலும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு முன்னதாக கடந்த 2016ம் ஆண்டில் மகளிரின் வலிமை என்னும் பொருள்படும் நாரிசக்தி விருது மற்றும் 2017ம் ஆண்டில் யோகா ரத்னா விருது ஆகியவற்றை பெற்றுள்ள நானம்மா யோகா பாட்டி என்ற பெயரில் கடந்த ஆண்டு ஊடகங்களில் சிறப்பான இடத்தை பிடித்தது.
இந்நிலையில், வயோதிகம் சார்ந்த உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த நானம்மாள் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி தனது 99-ம் வயதில் கோவையில் உயிரிழந்தார். இவர், 45 ஆண்டுகளில் 10 லட்சம் மாணவர்களை உருவாக்கி இருக்கிறார். இவரிடம் படித்த, 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது யோகா ஆசிரியராக பயிற்சி அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில், சிபிஎஸ்இ +1 பாடப்புத்தகத்தில் யோகா பாட்டி நானம்மான் குறித்த தகவல் இடம்பெற்றிருக்கிறது. நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், யோகா பாட்டி நாணம்மாள் குறித்து அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.