“தமிழகம் முழுவதும் அனைத்து கிளப்களில் அதிரடியாக ரெய்டு நடத்துங்கள்” – ஹைகோர்ட் உத்தரவு!

tamilnadu
By Nandhini Sep 28, 2021 08:32 AM GMT
Report

சென்னை கோமலீஸ்வரன் பேட்டையில் உள்ள பாண்டியன் பொழுதுபோக்கு கிளப் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், சட்டத்துக்குட்பட்டு கிளப் நடத்தப்படுவதாகவும், ஆனால் காவல்துறையினர், சோதனை என்ற பெயரில் துன்புறுத்துவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், கிளப்புகள் மற்றும் சொசைட்டிகள் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்வது காவல்துறை அதிகாரிகளின் கடமை என்று தெரிவித்தார். அப்போது அரசு தரப்பில், கிளப் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாகவும் சட்டவிரோத பணம் வைத்து சூதாட்டம் நடப்பட்ட வழக்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தார். மேலும் இந்த வழக்கில் தமிழக அரசின் பத்திரப் பதிவு துறை ஐஜியை சேர்த்த நீதிபதி, தமிழகம் முழுவதும் உள்ள கிளப்கள் மற்றும் சொசைட்டிகளை, சோதனை செய்து அவை முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா, சட்டத்துக்கு உட்பட்ட நடவடிக்கைகளை நடைபெறுகிறதா எற ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களிலும் கிளப்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த கிளப்புகளின் பதிவுகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். இதுகுறித்து 12 வாரத்திற்குள் அறிக்கை அளிக்குமாறும் ஆணையிட்டிருக்கிறார்.