பானிபூரி சாப்பிட்ட பெண் உயிரிழப்பு - சாலையோரக் கடைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

samugam-viral-news
By Nandhini Sep 28, 2021 03:03 AM GMT
Report

ஈரோடு மாவட்டம், என்.ஜி.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். இவரது மகள் ரோகிணி தேவி (34). இவர் ஒரு பட்டதாரி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. 3 தினங்களுக்கு முன்பு ரோகிணி தேவிக்கு அவரது சகோதரர்கள் இருவர் பானிபூரி வாங்கி கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்கள்.

அந்த பானிபூரியை சாப்பிட்ட ரோகிணி தேவி சற்று நேரத்தில் வாந்தி எடுத்தார். பின்னர் உடற்சோர்வு காரணமாக படுத்து தூங்கிய அவர் மறுநாள் காலையிலும் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.

இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுபோய் சேர்த்தனர். ஆனால், அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதற்காக மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு ரோகிணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்கள்.

இதனையடுத்து ரோகிணியின் தந்தை, தனது மகள் பானிபூரி சாப்பிட்டு சிறிது நேரத்தில் வாந்தி எடுத்ததாகவும், அதை தொடர்ந்து அவர் இறந்து விட்டதாகவும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும், ரோகிணி தேவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, இறப்புக்கான காரணம் கண்டறிவதற்காக உடல் உறுப்புகள் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பானி பூரிக்கடை மூடப்பட்டது. தற்போது ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அதிகாரி தங்க விக்னேஷ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன் தினம் ஈரோட்டில் உள்ள சாலையோர பானிபூரி கடைகள், உணவகங்களில் திடீரென சோதனை மேற்கொண்டார்.

காலாவதியான உணவு பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் சில சாலையோர கடைக்காரர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமல் உள்ளது தெரிய வந்தது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அதிகாரி கூறுகையில், ரோகிணி தேவியின் உடற்கூறு பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே, அவரது மரணத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும். மேலும் பொதுமக்கள் உணவு சம்பந்தமான புகார்களை 9444042322 என்ற செல்போன் எண்ணில் உடனடியாக தெரிவிக்கலாம் என்று கூறினார். 

பானிபூரி சாப்பிட்ட பெண் உயிரிழப்பு - சாலையோரக் கடைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு | Samugam Viral News