மதுபோதை தலையேறியதால் பள்ளி வகுப்பறையில் படுத்துத் தூங்கிய தலைமையாசிரியர்! அதிர்ச்சி வீடியோ வைரல்
பள்ளியில் தலைமையாசிரியர் ஒருவர் மதுபோதை தலைக்கேறியதால் வகுப்பறையிலேயே படுத்துத் தூங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் பெற்றோர்களுடன் இருப்பதைக் காட்டிலும் பள்ளிகளில் ஆசிரியர்களுடன் தான் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். இடையில் கொரோனா பரவல், மாணவர்களை பள்ளிகளுக்கு செல்லவிடாமல் தடுத்து வைத்திருந்தது. தற்போது நோய்த்தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.
இதனையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் மாணவர்கள் பள்ளி வகுப்புகளுக்கு திரும்பி வருகிறார்கள். கொரோனா பரவல் காரணமாக உத்வேகம் இழந்துள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தகுந்த வழிகாட்டியாக இருந்து அவர்களின் மன அழுத்தத்தையும் போக்கி, பாடங்களின் மீது கவனத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்ற நிலையில், சில ஆசிரியர்கள் தவறான முன் உதாரணமாக மாறி விடுகிறார்கள்.
அந்த வகையில், சட்டீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தின் கரி மடி எனும் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றின் தலைமையாசிரியர் ஒருவர் வகுப்பறையில் மது போதை தலைக்கேறி அங்கேயே படுத்துத் தூங்கிய புகைப்படம் மற்றும் வீடியோ தற்போ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததால், ராம்நாராயண் பிரதான் என்ற தலைமை ஆசிரியர் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
இச்சம்பவம் குறித்து வட்டார கல்வி அலுவலரான ஜே.எஸ்.ஜோகி கூறுகையில், ‘அந்த ஆசிரியரின் நடத்தை காரணமாக நான் மிகவும் அவமானகரமான உணர்கிறேன். மாவட்ட நிர்வாக அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அந்த ஆசிரியரை இடைநீக்கம் செய்திருக்கிறோம்’ என்றார்.
இச்சம்பவம் குறித்து அப்பள்ளி மாணவர்கள் கூறுகையில், அந்த ஆசிரியர் இது போல குடித்துவிட்டு புரள்வது இது முதல் முறை நடக்கும் சம்பவம் கிடையாது. இதற்கு முன் பல முறை இப்படி அவர் நடந்து கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள்.